Recent News

Recent Circulars

தமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (TANFETO) - 17-04-2013 – அனைத்து வட்டத் தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா

 

தமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு

 

TAMILNADU FEDERATION OF GOVERNMENT EMPLOYEESS AND TEACHERS’ ORGANISATIONS (TANFETO)

எம்.ஆர்.அப்பன் இல்லம்

எண்.46, தேரடித் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.

தொலை பேசி எண்.28441286, 2844.938 பேக்ஸ் 28443601

 

நாள்.31-03-2013

 

அன்புடையீர், வணக்கம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் எனவும், புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய பென்சன் திட்டமே தொடரும் எனவும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது சங்கங்களை அழைத்துப் பேசி தீர்வு காணப்படும் என்வும் உறுதியளித்தார்.

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தங்களது தொடர் போரட்டங்களின் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்பது பெயரளவில் மட்டுமே தற்போது இருந்து வருகிறது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்ற வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி, கல்விப்படி எனப் பல்வேறு படிகளையும், 01-01-2006 முதலான காலத்திற்கான நிலுவைப் பயன்களையும் வழங்கிட தமிழக அரசு  இதுகாறும் முன்வரவில்லை.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இணைந்து நடத்திய பலகட்டப் போராட்டங்களின் வாயிலாக, ஊதிய மாற்றத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் அநீதிகளைக் களைவதற்காக குறை தீர்க்கும் மூவர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை இதுகாறும் அமல்படுத்தப்படாமல் உள்ளது.

அரசுப்பணிகளிலும், பள்ளி முதல் கல்லூரி வரையிலான ஆசிரியப் பணிகளிலும் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்ப்ப்படாமல், பணியமர்வுகளில் அவுட்சோர்ஸிங் மற்றும் பல்வேறு வகையான தனியார்மயமாக்கல் முறையில் பணி நியமனங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதன் தொடர் விளைவாக ஏற்பட்டுள்ள பணிப்பளுவால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் மனச் சோர்வுடன் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இச்சூழலில், தமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் 31-03-2013 அன்று காலை 11 மணியளவில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், மூட்டா, தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சங்கப் பிரதிநிதிகளின் விவாதத்தின் அடிப்படையில், பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்துவது என்று முடிவாற்றப்பட்டது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண முன்வர வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டது.

கோரிக்கைகள்:

1)     ஊதிய குறை தீர்க்கும் மூவர் குழுவின் அறிக்கையை வெளியிட்டு, சங்கங்களை அழைத்துப் பேசி அமல்படுத்த வேண்டும்.

2)     தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் கால வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.

3)     அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

4)     தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்.

இயக்கங்கள்:

01-04-2013 அன்று காலை 11 மணிக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களைச் சந்தித்து முறையீடு வழங்குவது.

17-04-2013 அன்று கூட்டமைப்பின் சார்பில், தமிழகம் முழுவதும் அனைத்து வட்டத் தலைநகரங்களில் அரசின் கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் மாலை நேர தர்ணா நடத்துவது.

அரசு ஊழியர்களே! ஆசிரியர்களே!

கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான அனைத்து வட்டத் தலைநகரங்களில் நடைபெறும் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்போம்...

போராடுவோம்... வெற்றி பெறுவோம்...



Back