அரசு உதவி பெறும் அல்லது உதவி பெறாத வகுப்புகளை ரெகுலர் விரிவுரையாளர்களை கொண்டு நடத்துகிறார்களா என்பதை சென்னை பல்கலைக்கழகம் சரிபார்க்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

அரசு உதவி பெறும் கல்லூரிக்கு உத்தரவு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு பதில் ரெகுலர் விரிவுரையாளர்களை நியமிக்க அரசு உதவி பெறும் கல்லூரிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

 

சென்னை கவுரிவாக்கத்தில் எஸ்.ஐ.வி.இ.டி., அறக்கட்டளை நடத்தும் கல்லூரி உள்ளது. முதல் ஷிப்ட்டில் (காலை 8.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை) வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்குகிறது. சுயநிதி அடிப்படையில் இரண்டாவது ஷிப்டிலும் (பிற்பகல் 1.30 முதல் மாலை 6.15 மணி வரை) வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் தமிழ் துறையில் கவுரவ விரிவுரையாளராக கஸ்தூரி என்பவர் பணியாற்றி வந்தார். அறக்கட்டளை நிர்வாகி தேர்தலில், கஸ்தூரியின் கணவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல், கஸ்தூரிக்கு பணி மறுக்கப்பட்டது. பி.எச்டி., பெறாததால், கவுரவ விரிவுரையாளராக நியமிக்க தகுதியில்லை என காரணம் கூறப்பட்டது. 
முதல் ஷிப்ட்டில் தமிழ் துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கடந்த ஆண்டு ஜூன் மாதம் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். தன்னை பணியில் அமர்த்த உத்தரவிட வேண்டுமென கோரினார்.
இந்த கல்லூரியில் இரண்டாவது ஷிப்ட்டில் நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் கவுரவ விரிவுரையாளர்கள். யாரும் ரெகுலர் விரிவுரையாளர்கள் அல்ல. ஒரு மணி நேரத்துக்கு 100 ரூபாய் என, கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. தமிழ் துறையில் முதல் ஷிப்ட்டில் நான்கு விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் இருவர் ரெகுலர் விரிவுரையாளர்கள். இருவர் கவுரவ விரிவுரையாளர்கள். இந்த ஆண்டில் தான் இரண்டு கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பி.எச்டி., பட்டம் பெற்றவர்கள். பணி இல்லாததால், 2009ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதிக்கு பின், கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க தேவையில்லை என பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டில் இரண்டு பேர் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். கவுரவ விரிவுரையாளர்களுக்கான தகுதி ஒப்புதலை, எஸ்.ஐ.வி.இ.டி., பெறவில்லை. ரெகுலர் விரிவுரையாளர்களை நியமிக்காமல், கவுரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்துவது சட்ட விரோதமானது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரானது.   

கவுரவ விரிவுரையாளராக ஒருவர் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, அவர் பி.எச்டி., பட்டம் பெறவில்லை என காரணம் கூறி வேறு ஒருவரை கல்லூரி நியமிக்க முடியாது. 2007ம் ஆண்டு கஸ்தூரி பணியில் சேரும் போது, பி.எச்டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என கூறப்படவில்லை. எனவே, ரெகுலர் விரிவுரையாளரை நியமிக்கும் வரை, கவுரவ விரிவுரையாளராக கஸ்தூரியை நியமிக்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களை எடுத்து விட்டு, இரண்டு ஷிப்ட்டுகளிலும் ரெகுலர் விரிவுரையாளர்களை எஸ்.ஐ.வி.இ.டி., நிரப்ப வேண்டும். ரெகுலர் நியமனம் பெற தகுதியிருந்தால், மனுதாரரும், மற்ற கவுரவ விரிவுரையாளர்களும் போட்டியிடலாம். அரசு உதவி பெறும் அல்லது உதவி பெறாத வகுப்புகளை ரெகுலர் விரிவுரையாளர்களை கொண்டு நடத்துகிறார்களா என்பதை சென்னை பல்கலைக்கழகம் சரிபார்க்க வேண்டும். அந்த விரிவுரையாளர்களின் கல்வித் தகுதிக்கு ஒப்புதல் பெற்றிருக்கவில்லை என்றால், வகுப்புகளுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

 http://www.dinamalar.com//News_Detail.asp?Id=77593&

Back