03-11-2012 - சுயநிதி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசை வலியுறுத்தி மதுரை மற்றும் திருநெல்வேலியில் மாபெரும் மறியல்

இடம்: மதுரை, திருநெல்வேலி

நாள்: 03-11-2012, சனிக்கிழமை

நேரம்: காலை 10 மணி

சுயநிதிக் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தவும் தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் மறியல்

 

 

அன்புடையீர்,

வணக்கம்.

தமிழகத்தில் இன்று 60 அரசு மற்றும் 133 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள் மட்டும் உள்ளன. ஆனால் 300க்கும் அதிகமான சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளும், 30க்கும் அதிகமான பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும், 1978ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு மானியம் அனுமதிக்காத காரணத்தால் சுயநிதிக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளிலும், சுயநிதி வகுப்புகளிலும் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் M.A., M.Sc., M.Com, M.Phil.மற்றும் Ph.D. பட்டங்களுடன் மிகக் குறைந்த மாத ஊதியத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருகிறார்கள்.

சுயநிதி ஆசிரியர், அலுவலர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆசிரியர் அலுவலர்களுக்கும் எந்த அரசு விதியும் பொருந்தாது என்று நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். பெண் ஆசிரியர்களுக்கு பேறுகால விடுப்பு கூட அனுமதிக்காத நிலை இந்த கல்லூரிகளில் நிலவுகிறது. பணி நியமனங்களிலும் அரசு விதிகள் பின்பற்றப்படுவதில்லை. எல்லாவித நிதி நிர்வாக சீர்கேடுகளையும் இந்த நிர்வாகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. பணி நியமன ஆணை, பணிப் பதிவேடு, முறையான ஊதியம், பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, விடுப்பு சலுகைகள் ஆகியவை வழங்கப்படாததால் பல இன்னல்களை இந்த ஆசிரியர்கள் அனுபவித்து வருகிறார்கள். பல கல்லூரி நிர்வாகங்கள் எந்த முகாந்தரமும் இல்லாமல் தாங்கள் நினைத்த நேரத்தில் ஆசிரியர்களையும் அலுவலர்களையும் பணியிலிருந்து நீக்கும் அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு இந்தக் கொடுமைகளை கண்டு கொள்ளாத நிலை தொடர்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணச் சலுகை, பேருந்து கட்டணச் சலுகை, கல்வி உதவித் தொகை, மடிக்கணினி போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சலுகைகள் சுமார் 2 இலட்சம் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால் சுயநிதி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் சுமார் 5 இலட்சம் மாணவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைப்பதில்லை. இது பெரும் அநீதியல்லவா? ஏனிந்த பாரபட்சம்?

தவிர, சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வென்றெடுத்த 69% இட ஒதுக்கீடு என்பது சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் பின்பற்றப்படுவதில்லை. இதனால் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள் போன்றோர் உயர்கல்வி பெற முடியாத சூழல் நிலவுகிறது.

1.4.2003க்குப் பிறகு தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஓய்வு காலம் புதிய பென்சன் திட்டம் மூலமாக இருளாக்கப்பட்டுள்ளது.

1.1.2006க்குப் பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்கப்படாமல் பணி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் தற்போது உள்ளது.

இந்த நிலைகள் மாறி உயர்கல்வி தமிழகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைத்திடவும், தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் சுயநிதிக் கல்லூரிகள் / வகுப்புகள், பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், பயிலும் மாணவர்களுக்கும் கிடைத்திடவும்,  தமிழக அரசு கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுகிறோம்.

Note

This News is with an attachment file.


Back