02-02-2014 அன்று சென்னையில் நடைபெற்ற ஜேஏசி-டான்சாக் செயற்குழு கூட்ட முடிவுகள்

02.02.2014 அன்று ஜே.ஏ.சி-டான்சாக் செயற்குழுக் கூட்டம் சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கக் கட்டிடத்தில் ஏ.யு.டி தலைவர் பேரா. சோ.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்காணும் முடிவுகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

1.  கடந்த 2013 ஆகஸ்ட் செப்டம்பரில் ஜே.ஏ.சி–டான்சாக் கோரிக்கைகளை தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி நிறைவேற்றக் கோரி நான்கு கட்ட போராட்டத்தை நடத்தி, 26.10.2013 அன்று சென்னையில் ஐந்தாவது கட்டமாக மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மாண்புமிகு தமிழக உயர்கல்வி அமைச்சர் திரு. பழநியப்பன் அவர்கள் தலையிட்டு நவம்பர் முதல் வாரத்தில் உயர் கல்விச்செயலாளரோடு பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததன் பேரில் ஜே.ஏ.சி–டான்சாக் பேரணி ஒத்திவைக்கப்பட்டது. மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை பேச்சு வார்த்தைக்கான எந்த முகாந்திரமும் இல்லை. இதை பரிசீலித்த ஜே.ஏ.சி-டான்சாக் செயற்குழு மாண்புமிகு தமிழக உயர்கல்வி அமைச்சர் திரு. பழநியப்பன் அவர்கள் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் உடனடியாக ஜே.ஏ.சி–டான்சாக் கோரிக்கைகள் மீது பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து 17.02.2014 க்குள் தீர்வு காணாவிட்டால் 22.02.2014 அன்று சென்னையில் ஏற்கனவே ஒத்திவைத்த பேரணியை நடத்துவது எனவும், அடுத்தகட்டமாக மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

2.  மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமதி கல்யாணி மதிவாணன் அவர்களின் ஆசிரியர் அலுவலர் மற்றும் மாணவர்கள் மீதான தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஜே.ஏ.சி- டான்சாக் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைக்கழகவேந்தரும் தமிழக அரசும் தலையிட்டு அனைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளையும் விலக்கிக்கொள்ளவும் பல்கலைக்கழகத்தின் மாண்பினை பாதுகாக்கவும் ஜே.ஏ.சி – டான்சாக் கேட்டுக்கொள்கிறது. 

3. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த பல்கலைக்கழக ஊழியர்கள் 66 பேரை மனிதாபிமானமற்ற முறையில் பணி நீக்கம் செய்திட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தை ஜே.ஏ.சி– டான்சாக் வன்மையாக கண்டிப்பதோடு அவர்களை மீளப்பணியிலமர்த்த தக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் பல்கலைக்கழகத் தேர்வுத்துறையின் குளறுபடிகளால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு மாணவர்கள் துயர் துடைக்க தமிழக அரசை ஜே.ஏ.சி– டான்சாக் கேட்டுக்கொள்கிறது

4. திருநெல்வேலி புனித யோவான் கல்லூரி நிர்வாகத்தால் பழிவாங்கும் போக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு பேராசிரியர்களை உடனடியாக மீளப்பணியிலமர்த்த திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநரின் உத்தரவை அமல்படுத்தத் தவறிய கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச்சட்ட விதிகளின் படி தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை ஜே.ஏ.சி– டான்சாக் கேட்டுக்கொள்கிறது    

5 தமிழகத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான தமிழக உயர்கல்வித் துறையின் அரசாணை தனக்குப் பொருந்தாது என்று அரசு உதவி பெறும் கிருத்துவ சிறுபான்மைக் கல்லூரியான சென்னை லயோலா கல்லூரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அக்கல்லூரிக்கு சாதகமான தீர்ப்பினை அளித்துள்ளது. மேற்படி அரசாணைப்படி சிறுபான்மைக் கல்லூரிகள் 50% இடங்கள் தகுதி அடிப்படையில் அந்த குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், மீதி 50% இடங்கள் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டுமென உள்ளது. சில சிறுபான்மைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தகுதி மற்றும் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதில்லை எனவும் சிபாரிசு மற்றும்  நன்கொடை அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. இந்தத் தீர்ப்பு மோசமான முன்னுதாரணமாகக் கூடிய அபாயம் உள்ளது., வரும் ஆண்டுகளில், மற்ற சிறுபான்மைக் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணையை மதிக்காமல் தங்கள் இஷ்டம் போல் நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. மக்கள் வரிப் பணத்தை அரசு மானியமாகப் பெறும் ஒரு கல்லூரி (சிறுபான்மையோ பெரும்பான்மையோ) அரசின் ஆணையையும் இட ஒதுக்கீட்டையும் மதித்து நடப்பது அவசியமாகும். ஆகவே, இந்த தீர்ப்பினை எதிர்த்து அரசுத் தரப்பில் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும், அதில் நீதி கிடைக்காத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திடவும் தமிழக அரசை ஜே.ஏ.சி-டான்சாக் கேட்டுக் கொள்கிறது. 

6. மீளப்பணியமர்த்தல், போராட்ட காலத்தை வரன்முறைப்படுத்தல், ஓய்வூதியப்பலன்கள் மற்றும் உதவிபெறும் பாடப்பிரிவை மூடுதல் குறித்த  அரசு ஆணைகளை மதிக்காத திருச்சி தேசியக் கல்லூரி, தஞ்சை தமிழவேள் உமாமகேஸ்வரனார் கலைக்கல்லூரி, கோவை சி.பி.எம். கல்லூரி ஆகிய கல்லூரி நிர்வாகங்களின் ஆசிரியர், அலுவலர் மற்றும் மாணவர் விரோதப்போக்கினை ஜே.ஏ.சி- டான்சாக் வன்மையாகக் கண்டிக்கிறது. மேற்படி கல்லூரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை ஜே.ஏ.சி-டான்சாக் கேட்டுக் கொள்கிறது. 

7. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் மற்றும் சுயநிதிக்கல்லூரி/சுயநிதி வகுப்புகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் ஊதிய மானியம், பணிப்பாதுகாப்பு மற்றும் பணிநிலைகளை மேம்படுத்திட தமிழக அரசினை வலியுறுத்தி ஜே.ஏ.சி-டான்சாக் சார்பாக ஒருநாள் கவன ஈர்ப்புக் கருத்தரங்கை வரும் 2014 மார்ச் மாதம் சென்னையில் நடத்திட முடிவு செய்துள்ளது.     

Back