ஜேஏசி-டான்சாக் சார்பில் சென்னையில் 22-02-2014 அன்று நடைபெற்ற பெருந்திரள் பேரணி – நிலுவையிலுள்ள நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்


தலைமை உரையாற்றும் மூட்டா தலைவர் பேரா.மனோகரஜஸ்டஸ்

இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு.ராஜேந்திரன் துவக்க உரை

பேரணியில் கலந்து கொண்ட மூட்டா உறுப்பினர்கள்

கோரிக்கை விளக்கவுரை -ஏயூடி பொதுச்செயலாளர் பேரா..ரவிச்சந்திரன்

கோரிக்கை விளக்கவுரை -ஜிசிடிஏ தலைவர் பேரா.தமிழ்மணி

கோரிக்கை விளக்கவுரை -மூட்டா பொதுச்செயலாளர் பேரா.சுப்பாராஜு

கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) - தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் (TANTSAC)
கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் பேரணி

கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் (TANTSAC) இணைந்த ஜேஏசி-டான்சாக் கூட்டமைப்பின் சார்பில், 01.01.2006 முதல் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள விதிகளின்படி பணிமேம்பாடு உடனே வழங்கிட வேண்டும், புதிய பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும், 14940/- அடிப்படை ஊதியத்தில் ஐந்து ஆண்டுகள் பணி முடித்த தேர்வு நிலை ஆசிரியர்களுக்கு 01.01.19996 முதல் பணி மேம்பாடு வழங்கிட வேண்டும், ஊக்கத்தொகையினை 01.09.2008 தேதிக்குப் பதிலாக 01.01.2006இலிருந்து வழங்க வேண்டும், 01.01.2006 முதல் 31.12.2006 வரையுள்ள காலத்திற்கு பல்கலைக்கழகமானியக்குழுவின் ஊதிய நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும், காலியாக உள்ள கல்லூரி ஆசிரியர்கள், நூலகர், உடற்பயிற்சி இயக்குநர், அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஓய்வு பெறும் வயதினை பல்கலைக்கழகமானியக்குழு பரிந்துரையின்படி 65ஆக அமல்படுத்த வேண்டும், அனைத்து ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பணிப்பாதுகாப்பை உறுதி செய்யும் ஆணையினை வெளியிட்டு உறுதிப்படுத்த வேண்டும், சுயநிதிக்கல்லூரிகள், உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு பொருந்துமாறு தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் 1976இல் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், சுயநிதிக்கல்லூரிகள் மற்றும் சுயநிதி வகுப்புகளில் பயிலும் மாணவர் பயிற்சிக் கட்டணத்தை ஒரு குழு அமைத்து உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும், கல்லூரி அலுவலர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் போது, கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்குவது போல், அலுவலர்களுக்கும் மீளப்பணியமர்த்தலை வழங்கி மே மாதம் 31ஆம் தேதி வரை பணி நீட்டித்து வழங்கிட வேண்டும், தமிழகத்தில் உள்ள பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர் பல்கலைக்கழகங்கள் மீது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வழங்கியுள்ள அறிக்கையின்படி உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன் செய்துள்ள நிர்வாக முறைகேடுகள் மீது விசாரணை நடத்த ஒரு குழுவினை அமைத்திட வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 20ஆண்டு காலப் பணியனுபவம் இருந்தாலே முழு ஓய்வூதியப் பயனை அளிப்பது போல் தமிழக அரசும் கல்லூரி ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும், 2013 பிப்ரவரி 20,21 அகில இந்திய வேலை நிறுத்த நாட்களை வரன்முறை செய்து அந்த நாட்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும், UGCஆணையினை அமல்படுத்தி தேர்வு நிலைப் பேராசிரியர்களின் ஊதியத்தை ரூ23890/- என்ற உயர்வூதியத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற பொதுக்கோரிக்கைகளை உள்ளடக்கிய பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்தி 22-02-2014 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பேரணி  நடைபெற்றது.

மூட்டாவின் தலைவர் பேரா.மனோகரஜஸ்டஸ் அவர்கள் தலைமையில், இந்திய  பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் (STFI) தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்கள் பேரணியினைத் துவக்கி வைத்து கோரிக்கைகளை வென்றெடுக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மூட்டா (MUTA), அனைத்திந்திய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT), தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் (TNGCTA)  மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் (TANTSAC) உள்ளிட்ட ஜேஏசி-டான்சாக் கூட்டமைப்பினைச் சார்ந்த அனைத்து சங்கப் பொறுப்பாளர்களைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்திருந்து கலந்து கொண்ட எழுநூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விண்ணதிர கோரிக்கை முழக்கமிட்டு பேரணியில் சென்றனர்.

பேரணியின் இறுதியில் அனைத்திந்திய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பேரா..ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் பேரா.தமிழ்மணி, மூட்டா அமைப்பின் பொதுச்செயலாளர் பேரா.சுப்பாராஜூ, தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அய்ஃபக்டோவின் முன்னாள் தேசியச் செயலர் பேரா.ஜெயகாந்தி பேரணியினை முடித்து வைத்து நிறைவுரையாற்ற மூட்டாவின் பொருளாளர் பேரா.பாண்டி பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

Back