பேரா.வெ.சண்முகசுந்தரம் நினைவு நாள் – 13-07-2015 – மதுரை, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் நகரங்களில் கருத்தரங்கம்


மதுரையில் முனைவர்.சந்திரகுரு அவர்கள் கொடியேற்றினார்

பேரா.இராஜமாணிக்கம் அவர்களின் கருத்தரங்க உரை

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பணியாற்றிய பேரா. வெ. சண்முகசுந்தரம் அவர்கள், மூட்டாவின் தலைவராக ஆசிரியர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அரசின் அடக்குமுறைக் கொள்கைகளை எதிர்த்து போராடியவர். தனது அனல் பறக்கும் பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த பேராசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு கிடைக்க வழிகோலியவர். காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு தொடர் போராட்டங்களின் விளைவாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு 1985 ஜுலை 13ஆம் நாள் தன் வாழ்வின் ஓட்டத்திலிருந்து விடைபெற்றார். அன்னாரை கௌரவிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 13ஆம் நாள் பேரா. சண்முகசுந்தரத்தின் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.


பேரா. சண்முகசுந்தரத்தின் 31ஆவது நினைவு நாளான 13-07-2015 அன்று மதுரை, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ஆகிய நகரங்களில் மூட்டாவின் சார்பில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. மதுரை மூட்டா அலுவலகத்தில் மூட்டா இரண்டாம் மண்டலச் செயலாளர்  பேரா.கல்யாணராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அனைத்திந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பேரா.இராஜமாணிக்கம் “அறிவியல் மனோபாவம்” என்ற தலைப்பிலும், திருநெல்வேலி மூட்டா அலுவலகத்தில் மூட்டா மூன்றாம் மண்டலத்தலைவர் பேரா.முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநிலச் செயலாளர் தோழர்.மோகன் ”தொழிலாளர் நலச் சட்டங்களும் இன்றைய அரசும்” என்ற தலைப்பிலும், நாகர்கோவில் தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க அலுவலகக் கட்டிடத்தில்  நான்காம் மண்டலத் தலைவர் பேரா.ரெத்தினசிகாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளார் சங்கத்தின் தலைவர் திரு.ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் ”கருத்துரிமை மீதான தாக்குதல்கள்”  என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை முதலாம் மண்டலச் செயலாளர் பேரா.செந்தாமரைக்கண்ணன், மூன்றாம் மண்டலச் செயலாளர் பேரா.நவநீதகிருஷ்ணன், நான்காம் மண்டலச் செயலாளர் பேரா.நாகராஜன் ஆகியோர் வரவேற்க, இரண்டாம் மண்டலப் பொருளாளர் பேரா.பலராமன், மூன்றாம் மண்டலப் பொருளாளர் பேரா.பாலு, நான்காம் மண்டலப் பொருளாளர் பேரா.ஐசக் அருள்தாஸ் ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவின்றனர்.


கருத்தரங்கிற்கு முன்பாக மதுரை மூட்டா அலுவலகத்தில் மூட்டா கல்விக்குழுவின் முன்னாள் அமைப்பாளர் முனைவர்.சந்திரகுரு அவர்களும், திருநெல்வேலி மூட்டா அலுவலகத்தில் மூட்டா மூன்றாம் மண்டல முன்னாள் பொருளாளர் முனைவர்.பெருமாள் அவர்களும், நாகர்கோவில் மூட்டா அலுவலகத்தில் மூட்டாவின் முன்னாள் தலைவர் பேரா.அனந்தகிருஷ்ணன் அவர்களும் மூட்டா பேரியக்கத்தின் கொடியினை ஏற்ற மன்ற உறுப்பினர்கள் மூட்டாவின் தியாகச் செம்மல்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Back