ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கைது – கருத்துரிமை காக்க ஓங்கிக் குரல் எழுப்புவோம் – மூட்டா மத்தியச் செயற்குழு வேண்டுகோள்

கடந்த சில நாட்களாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடந்து வருகிற நிகழ்வுகள் குறித்து மூட்டா ஆழ்ந்த கவலை கொள்கிறது. தீவிரவாதிகளுக்கும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கும் ஆதரவாக இந்தியாவிற்கு எதிராகக் கோஷமிடுவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது என்பதால், அத்தகைய செயல்பாடுகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டியவை என்று மூட்டா கருதுகிறது. அதே நேரத்தில், மத்திய அரசானது இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் உயர்கல்வித்துறையில் உயரிய ஜனநாயக மாண்புடைய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குத் திட்டமிட்டு களங்கம் விளைவிக்கும் சதிச் செயலைச் செய்ய வேண்டாம் என்று மூட்டா கேட்டுக் கொள்கிறது. 
நடந்த நிகழ்வின் மீது பல்கலைக்கழகம் அதன் செயல்பாட்டு முறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வை மட்டும் கொண்டு உயர்கல்வி அமைப்புகளின் நீண்ட நெடிய ஜனநாயகச் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்க வேண்டாம் எனவும் மூட்டா மத்தியச் செயற்குழு எச்சரிக்கிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்கையா குமார், போதிய ஆதாரங்களின்றி, தேச விரோதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டதையும், 15.02.2016 அன்று புது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில்  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலையும் மூட்டா செயற்குழு  வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தச் செயலானது பேச்சுரிமைக்கு எதிரான நேரடித் தாக்குதல் என்பதோடு பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியினை பலவீனப்படுத்தும் எண்ணத்தைக் கொண்டதுமாகும். டெல்லி காவல்துறையைக் கையில் வைத்துள்ள மத்திய அரசானது உடனடியாக கன்கையா குமார் மீதான குற்றச்சாட்டுகளை உரிய சான்றாதாரங்களுடன் நிறுவ வேண்டும் அல்லது எவ்வித நிபந்தனையுமின்றி அவரை விடுவிக்க வேண்டும் என்று மூட்டா கோருகிறது.
இத்தகைய கொடுஞ்செயலுக்கெதிராகவும், கருத்துரிமைக்காகவும் ஜனநாயக எண்ணம் கொண்டோர் ஓங்கிக் குரல் எழுப்பிட வேண்டுமென மூட்டா செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Back