Recent News
Recent Circulars
01-04-2012 சுயநிதிப் பிரிவு ஆசிரியர்களின் பிரச்சனைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநில அளவிலான கருத்தரங்கம்
மாநில கவன ஈர்ப்பு கருத்தரங்கம்
நாள் : 01.04.2012 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை
இடம் : லீலாவதி அரங்கம், வில்லபுரம், மதுரை
அன்புடையீர்,
வணக்கம்.
1982க்கு பின் அரசு கல்லூரிகளோ, அரசு உதவி பெறுகின்ற கல்லூரிகளோ இனி மேல் ஆரம்பிப்பதில்லை என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்த பின்பு, முழுக்க முழுக்க அரசு நிதியுதவியின்றி சுயநிதிக் கல்லூரிகள் என்றழைக்கப்படுகின்ற கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்டன. அரசு உதவி பெறுகின்ற கல்லூரிகளிலும் அரசின் நிதியுதவியின்றி புதிய பாட வகுப்புகள் துவக்கப்பட்டன.
இன்றைய நிலையில் பெரும்பாலான அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் பாடப் பிரிவுகளின் எண்ணிக்கையைவிட சுயநிதிப் பாட வகுப்புகளின் எண்ணிக்கைதான் அதிக அளவில் உள்ளது. முழுக்க முழுக்க அரசு நிதியில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் எவ்விதத் தடையுமின்றி சுயநிதிப் பிரிவிற்குப் பயன்படுத்திக்கொண்டு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கொள்ளை லாபம் அடைந்து வருகின்றன.
அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் நடைபெறும் சுயநிதி வகுப்புகள் அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் வகுப்புகளுக்கிடையே இயங்கக்கூடாது என்றிருந்த சட்டம் மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டு சுயநிதிப்பாடப் பிரிவுகள் அனைத்தும் சர்வ சுதந்திரமாக அரசின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும் பாட வகுப்புகளுடன் அவற்றுக்கு இணையாகப் பகல் நேரத்திலேயே இயங்கிக் கொண்டு இருக்கின்றன. மாணவர்கள் விரும்பிச் சேருகின்ற பாடப்பிரிவுகள் அனைத்தும் சுயநிதிப் பாடப் பிரிவுகளாகத் துவக்கப்பட்டு அதிகம் மாணவர்கள் அப்பாடப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டு கல்வி வியாபாரம் கொடிகட்டி நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஒரு பாடப்பிரிவு சுயநிதிப் பாடப்பிரிவாக வழங்கப்பட்டிருப்பின், அப்பாடப்பிரிவில் கூடுதல் வகுப்புகள் நடத்திட அனுமதி வழங்கப்படக்கூடாது என்று பல்கலைக் கழகத்தில் எடுக்கப்பட்ட முடிவு காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டது. சுயநிதிக் கல்லூரிகள் ஒரே பாடத்தில் எத்தனை பிரிவுகள் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பல்கலைக் கழகங்கள் தனியார் நிறுவனங்களின் கல்விக் கொள்ளைக்குத் துணை போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தொடங்கப்பட்ட அனைத்து சுயநிதிக்கல்லூரிகளிலும், அரசின் உதவி பெறும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும் சுயநிதி வகுப்புகளிலும் மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டணம், மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி, ஆசிரியர்களின் பணி நியமனம், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மற்றும் ஆசிரியர்களுக்கான விடுப்பு விதிகள் என அரசின் எந்தவிதமான சட்டதிட்டமும் அமல்படுத்தப்படாமல், இக்கல்வி நிறுவனங்கள் தனித்து தன்னந்தனி தீவுகளாய் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எந்த சட்டதிட்டத்திற்குள்ளும் வராத சுயநிதிக் கல்லூரிகள் தங்கள் இஷ்டம்போல் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம், மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறை எதையும் பின்பற்றாது நடத்திக் கொள்ளலாம், தகுதியின் அடிப்படையில் இல்லாமல் எவரையேனும் ஆசிரியர்களாக நியமித்துக் கொள்ளலாம், நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக ஊதியம் வழங்கமுடியுமோ அவ்வளவு குறைவாகக் கொடுத்துக் கொள்ளலாம் என்று தனி ராஜாங்கம் நடத்தி கொழுத்துக் கொண்டிருக்கின்றன. இக்கல்லூரிகளை ’சர்வ வல்லமை’ படைத்த மாநில/மத்திய அரசோ, பல்கலைக்கழக நிர்வாகமோ எந்தக் கேள்வியும் கேட்காது கண்களை இறுக மூடிக் கொண்டுள்ள நிலையில் உயர் கல்வியின் நிலை அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டுள்ளது.
இது ஒரு புறமிருக்க, பல்கலைக் கழகங்களால் ஆரம்பிக்கப்பட்ட உறுப்புக் கல்லூரிகளின் நிலை சுயநிதிக் கல்லூரிகளுக்கு சற்றும் சளைத்ததல்ல. பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் பிறப்பிலேயே பிறழ்நிலை கொண்டு துவக்கப்பட்டு தனியார் சுயநிதிக் கல்லூரிகளை விட மோசமான நிர்வாகத்தின் கீழ் சீரழிந்து வருகின்றன.
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிலை - சில உறுப்புக்கல்லூரிகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மாணவர்களிடம் பெறுகின்றன, சில கல்லூரிகள் தனியார் சுயநிதிக் கல்லூரிகளை விட கூடுதலாக மாணவர்களைச் சுரண்டி வருகின்றன. இக் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு தனியார் சுயநிதிக் கல்லூரிகளை விடக் குறைவான ஊதியம் வழங்கப்படுகின்றது, முறையான பணிமேம்பாடு வழங்கப்படுவதில்லை, இக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் எந்தப் பதவியில் பணியில் அமர்த்தப்படுகின்றனர் என்பதே தெரியாத சூழலில், பல்கலைக்கழகமானியக் குழு நிர்ணயித்துள்ள பதவிகளை விடுத்து புதுப்புது நாமகரணங்களுடன் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உதாரணத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பதவிகளான உதவிப்பேராசிரியர், இணைப்பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என்ற பணியிடங்களுக்கு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் அர்த்தமேயில்லை. விரிவுரையாளர், டீச்சிங் அஸிஸ்டண்ட், ரிசோர்ஸ் பெர்சன், கெஸ்ட் லெக்சரர்கள் எனப் பல பெயர்களில் அன்றாடங் காய்ச்சிகளாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பகுதியில் மனோ கல்லூரிகள் என்ற பெயரில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பல கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியரது நிலையும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களது நிலையும் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இங்கு பணியிலமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த கல்வியாண்டில் மீளப் பணியிலமர்த்தப்படும் போது ஏற்கனவே பெற்று வந்த சம்பளம் குறைக்கப்பட்டு, பணி மேம்பாடு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது. எவ்வித அடிப்படைக் கட்டுமானங்களும் இல்லாமல், இந்தக் கல்லூரிகள் அந்தப் பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களிலோ அல்லது வாடகைக் கட்டடங்களிலோ இயங்கி வருகின்றன. இந்த மனோ கல்லூரிகளனைத்தும், தங்களுக்கெனச் சொந்தமாகக் கட்டிடம் கூட இல்லாத நிலையில், வணிகமயமாக்கப்பட்ட கல்வியின் நிலையினைப் பறைசாற்றிக் கொண்டு திகழ்கின்றன.
இவ்வித உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகள் (?) தவிர, தற்போது சமுதாயக் கல்லூரிகள், துணை வளாகங்கள் மற்றும் கூடுதல் வளாகங்கள் எனப் புதுப்புது வகையில் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர், அலுவலர் மற்றும் மாணவ, மாணவியர் பிரச்சனைகளோ, யாராலும் தீர்த்து வைக்க இயலாத நிலையில் அதிகரித்துக் கொண்டே உள்ளன.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பகுதிக்குட்பட்ட கல்லூரி நிர்வாகிகள் சங்கத்திற்கும் மூட்டாவிற்கும் இடையே இரண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் மூலம் இப்பல்கலைக் கழகப் பகுதிக்குட்பட்ட சுயநிதிக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் குறைந்த பட்சமாக ரூ6000 மற்றும் ஏற்கனவே கூடுதலாகப் பெற்ற ஆசிரியர்களுக்கு 12.5% ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு மற்றும் பிற விடுப்புச் சலுகைகளை மூட்டா பெற்றுத்தந்தது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகக் கல்லூரி மதுரையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த ஊதியத்தைப் பெற்றுத்தருவதிலும், மதுரை காமராசர் பல்கலைக் கல்லூரி ஆண்டிபட்டியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊதியம் ரூ6000லிருந்து ரூ15000மாக உயர்த்துவதிலும் மூட்டாவின் முயற்சி முழுமையாக இருந்தது.
கல்லூரிக் கல்விக் கட்டணக் கொள்ளையினைத் தடுத்து நிறுத்தி, உரிய அரசு ஆணைகளின்படி மாணவர் சேர்க்கையினை உரிய முறையில் நடத்திடவும், கல்லூரிகளில் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், நூலகங்கள், ஓய்வறைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் இலவச பேருந்து வசதிகளை அளித்திடவும், தகுதியுள்ள ஆசிரியர்களை முறையான வழியில் பணியிலமர்த்திடவும், அரசு விதி முறைகளைப் பின்பற்றி ஆசிரியர் பணி நியமனம், ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு, பணி மேம்பாடு ஆகியவற்றை உரிய முறையில் அமல்படுத்திடவும், கொத்தடிமைகளாகப் பணி புரிந்திடும் ஆசிரியர்களை மீட்டிடவும், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பெறுகின்ற பணி நியமனத்தினைத் தடை செய்திடவும், பண்டிகை முன்பணம், சேமநலநிதி, அகவிலைப்படி, வருடாந்திர ஊதிய உயர்வு, பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் என அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் சுயநிதி ஆசிரியர்-அலுவலர்களுக்கும் கிடைத்திடும் வண்ணம் நடைமுறைப்படுத்திடவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மூட்டா கடந்த ஆண்டுகளில் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளது. சுயநிதி ஆசிரியர்களுக்காக பணிப்பாதுகாப்பு மாநாடு, மானியம் கோரும் மாநாடு மற்றும் கோரிக்கை மாநாடு என மூன்று மாநாடுகளை நடத்தியுள்ளது, சென்னையிலே உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பு 72 மணி நேர தொடர் உண்ணாவிரதமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முன்பு மூன்று நாட்கள் உண்ணாவிரதமும் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்-அலுவலர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளதை அவர்களுக்கு நினைவுபடுத்தி வரக்கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள், மத்திய மாநில அரசுகள், மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 01.04.2012ல் நடைபெறவுள்ள கருத்தரங்கில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். தாங்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்ய வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம்
மூட்டா தலைவர் பேரா.விவேகானந்தன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கத்தில் இரண்டாம் மண்டலத் தலைவர் பேரா. தேன்பாண்டியன் வரவேற்புரை நிகழ்த்திடவும், மூட்டா துணைத்தலைவர் பேரா.ஜான்சன் விளக்கவுரையாற்றிடவும் உள்ளனர்.
மதுரை உயர்நீதி மன்றக் கிளை வழக்கறிஞர் திரு. லஜபதிராய் அவர்கள் கருத்தரங்க சிறப்புரையினை ஆற்றுகின்றார். மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.சுந்தர்ராஜன், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அண்ணாதுரை, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வடிவேல் இராவணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. பூமிநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் திரு.இன்குலாப், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் முனைவர். பாண்டியன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் முனைவர்.தமிழ்மணி, மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவையின் பொதுச் செயலாளர் முனைவர்.இளங்கோவன், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. கனகராஜன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.கனகராஜ் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் திரு.செந்தில்குமார் ஆகியோர் கருத்தரங்கில் வாழ்த்தி பேச உள்ளனர். கருத்தரங்கத் தீர்மானங்களை மூட்டா இணைப் பொதுச் செயலாளர் பேரா. கணேசன் முன் மொழிய மூட்டா பொதுச் செயலாளர் பேரா. மனோகர ஜஸ்டஸ் நிறைவுரையாற்றுகின்றார். கருத்தரங்க இறுதியில் மூட்டா இரண்டாம் மண்டலச் செயலாளர் பேரா. கல்யாணராமன் நன்றியுரையாற்றுகின்றார்.