Recent News
Recent Circulars
சுயநிதி, பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 06.06.2013 அன்று தேர்வுத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
சுயநிதி, பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு
யு.ஜி.சி. ஊதியம், பணிபாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும்
மாணவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிடக் கோரி
மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக
தேர்வுத்தாள் திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டம்
06.06.2013 அன்று
தேர்வுத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
அன்புடையீர்,
தமிழகத்தில் 1978ஆம் ஆண்டிற்கு பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அரசு மானியத்தோடு தொடங்க அரசு அனுமதிக்காததினால் தற்போது 500க்கும் அதிகமான கலை அறிவியல் கல்லூரிகளும், பல்கலைக்கழக கல்லூரிகளும், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளும் சுயநிதி கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்தகல்லூரிகளிலும், உதவிபெறும் கல்லூரிகளிலுள்ள சுயநிதி வகுப்புகளிலும் பல ஆயிரம் பேராசிரியர்கள் M.A., M.Sc., M.Com., M.Phil., Ph.D. உள்ளிட்ட பட்டங்களுடன் மிகக் குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிகிறார்கள்.
சுயநிதி கல்லூரி மற்றும் வகுப்புகள், பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எந்த அரசு விதியும் பொருந்தாது என்று கூறியும், நீதிமன்ற தீர்ப்புகளை அமுல்படுத்த மறுத்தும் அவர்களுக்கு சேரவேண்டிய நியாயமான உரிமைகளை நிர்வாகிகள் மறுத்து வருகிறார்கள். பெண் ஆசிரியர்களுக்கு பேறுகால விடுப்பு கூட மறுக்கப்படுகிறது. பணிநியமனங்களில் அரசு விதிகள் பின்பற்றப்படாமலும் பணிநியமனம் பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை, பணிப்பதிவேடு, முறையான ஊதியம், பணிநிரந்தரம், பணிபாதுகாப்பு, பல்வேறு விடுப்பு விதிகள் ஆகியவை வழங்கப்படாமல் சொல்லொணா துயரத்தை இந்த ஆசிரியர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் அடித்தட்டு ஏழை, எளிய மக்கள் உயர்கல்வியை எளிதில் பெற தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணத்தை ரத்து செய்துள்ளது. முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அரசு மற்றும் அரசு மானியம் பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. சுயநிதி கல்லூரிகள் மற்றும் வகுப்புகளிலும் பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் படிக்கும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இவை கிடைக்கவில்லை. இது பெரும் அநீதியல்லவா?
மேலும் சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வென்றெடுத்த 69% இடஒதுக்கீடு என்பது சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பின்பற்றப்படுவதில்லை. இதனால் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் உயர்கல்வி பெற முடியாத சூழல் உருவாகிறது.
கிராமப்புற மக்களும் பின்தங்கிய பகுதியிலுள்ள மக்களும் உயர்கல்வியை எளிதில் பெறுவதற்கு வசதியாக தமிழக அரசு அவ்வப்போது புதிய அரசுக் கல்லூரிகளை இந்த பகுதிகளில் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக செயல்படாமல் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக செயல்பட பல்கலைக்கழக நிர்வாகங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் மாணவர்களிடமிருந்து பல்கலைக்கழகம் நிர்ணயிக்கும் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், ஆசிரியர்கள் தினக்கூலிகள் போன்று தேதி குறிப்பிடப்பட்ட காலத்திற்கு மட்டும் குறைந்த ஊதியத்திற்கு நியமனம் செய்யக்கூடிய அவலங்களும் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்கள் தொடங்கிய கல்லூரிகளிலும் இந்த நிலை தான் நீடிக்கிறது.
இந்த நிலை மாற உயர்கல்வி தமிழகத்தில் உள்ள எல்லா தரப்பினருக்கும் எளிதில் கிடைக்க, தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் சுயநிதி கல்லூரி மற்றும் வகுப்புகளிலும் பல்கலைக்கழக, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலும் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கிடைத்திட, சுயநிதி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக கல்லூரி, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி ஆசிரியர்களின் பணிபாதுகாப்பு, ஊதியம் மற்றம் பணிநிலைகளை உத்தரவாதப்படுத்திட தமிழக அரசு கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.
1. சுயநிதி கல்லூரி மற்றும் வகுப்புகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய மானியம் வழங்கி யு.ஜி.சி. ஊதிய விகிதம் அமுல்படுத்த வேண்டும்.
2. பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு அரசு முழு மானியம் வழங்கி அரசு கல்லூரிகளாக செயல்பட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
3. சுயநிதி ஆசிரியர்களுக்கு விடுப்பு, சம வாளிணிப்பு, பணி பாதுகாப்பு, மற்றும் உரிமைகள வழஙகும் வகையில் TNPC ( R ) Act 1976 இல் உரிய திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
4. அனைத்து சுயநிதி பிரிவு ஆசிரியர்களின் பணிநிலைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையாக அமுல்படுத்த வேண்டும்.
5. கல்வி உதவிப்பணம், பேருந்து கட்டணச் சலுகை, கல்வி கட்டணச் சலுகை போன்ற அனைத்து சலுகைகளும் வேறுபாடின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
6. பல்கலைக்கழக மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தேதி குறிப்பிட்டு குறித்த காலத்திற்கு ஆசிரியர்களை நியமிக்கும் முறை உடனே கைவிடப்பட வேண்டும். நிரந்தர அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெற வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை காமராசர் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுத்தாள் திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டமும், அதைத் தொடர்ந்து 6.6.2013 அன்று இரண்டு பல்கலைக்கழகங்களிலும் தேர்வுத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கும் போராட்டமும் நடத்த மூட்டா தீர்மானித்துள்ளது. இந்த போராட்டங்களில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்று வெற்றிபெறச் செய்திட அன்போடு அழைக்கிறோம்.
நன்றி!
Struggle Ahead! March on!! March on!
இவண்,
மூட்டா.