Recent News

Recent Circulars

கல்லூரி ஆசிரியர் மற்றும் அலுவலர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட தமிழக அரசையும் கல்லூரிக் கல்வி இயக்க்கத்தையும் வலியுறுத்தி மூட்டா ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள  ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழக உயர் கல்வி அமைச்சகமும்,  கல்லூரிக்கல்வித்துறையும் காட்டிவரும் மெத்தனமும் அலட்சியமும்  வேதனையளிப்பதாக உள்ளது. 31.05.2011 நிலவரப்படி 3120 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1358 அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழக கல்லூரிக்கல்வி இயக்க்கம் அறிவித்தது.  அடுத்த வந்த இரண்டு ஆண்டுகளில் (01.06.2011–31.05.2013) மேலும் பல ஆசிரியர் மற்றும்  அலுவலர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளார்கள். ஆக இன்றைய தேதியில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடந்த 28.05.2012 வெளியிட்ட அரசாணையில் தமிழக அரசு 31.05.2011 வரையிலான ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 3120ஐ நிரப்பிக்கொள்ள அனுமதியளித்தது  ஆனால் தற்போது காலியாகவுள்ள ஆசிரியர் பணியிட வகைகள் (இறப்பு, துறப்பு, மற்றும் ஓய்வு) குறித்து கணக்கிடுவதற்காக மண்டல அளவில் குழு(?) ஒன்றினை அமைத்து ஆராய்வதாக தமிழக உயர்கல்வி அமைச்சரும், கல்லூரிக் கல்வி இயக்குநரும் அறிவித்துள்ளார்கள். கடந்த காலங்களில் அரசாணை வெளியிடப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே பணியிடங்களை நிரப்பிட கல்லூரிக்கல்வி இணை இயக்குநர்கள் விரைந்து செயல்பட்டுள்ளார்கள். ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களை உடனே  நிரப்பிடாமல் குழு போட்டு காலம் தாழ்த்துவது ஊழலுக்கு வழிவகுக்கும் என நாம் எச்சரித்த பின்பும் கல்லூரிக் கல்வி இயக்குநர் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆகவே தமிழகத்திலுள்ள அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று வரையில் நிரப்பப்படாமல் உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர் காலிப்பணியிடங்களை உடனே  நிரப்பிட தமிழக அரசையும் கல்லூரிக் கல்வி இயக்க்கத்தையும் வலியுறுத்தி மூட்டா சார்பாக 28.06.2013 அன்று அனைத்து கல்லூரி வாயில்கள் வாயில் முன்பு ஆர்ப்பாட்டம், 02.07.2013 அன்று மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்று கோரிக்கைகளை வென்றிட போராட்ட இயக்கங்களை வலிமையாக நடத்துவது என் 22-06-2013 அன்று மதுரையில் கூடிய மூட்டா மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.



Back