Recent News

Recent Circulars

செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம் வெற்றி பெறச் செய்வோம்! மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிப்போம்!!

மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், ஆசிரியர் விரோத, ஊழியர் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகள், மக்கள் விரோதக் கல்விக் கொள்கைகள் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகள் - அதனால் இந்த தேசத்தின் ‘திருக்கோவில்கள்’ என்று போற்றப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்,, இரயில்வே, காப்பீட்டுத்துறை, பாதுகாப்புத்துறை,  வங்கித்துறை போன்ற துறைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் - ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வைச் சீரழிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டம் - இந்த தேசத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வைச் சுரண்டும் விலைவாசி உயர்வு - கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் மக்களின் உரிமைக் குரலை ஒடுக்கும் முயற்சிகள் - தொழிலாளர் விரோதச் சட்டத் திருத்தங்கள். மேற்கூறிய மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து அகில இந்திய அளவில் ஒருநாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் 2015 செப்டம்பர் 2 அன்று நடைபெறவுள்ளது.

இந்திய தேசத்தின் எதிர்காலம் இருண்டு விடாமல் தடுத்திடவும், வெள்ளையர்களிடமிருந்து பலகாலம் போராடி இரத்தம் சிந்திப் பெற்ற சுதந்திரம் மீண்டும் கொள்ளை போகாமல் காத்திடவும், இந்த தேசத்து மக்களின் எதிர்கால வாழ்வாதாரம் கானல் நீராகி காணாமல் போவதைத் தடுத்திடவும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய அளவில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி யின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ்,, காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி,, இடதுசாரி தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு,,  ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 11 மத்தியத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. பி.எஸ்.என்.எல்,, இரயில்வே, காப்பீட்டுத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வங்கித்துறை ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர்.

நாசகர நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக 1991 இல் இருந்து இதுவரை 15 அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டங்களை இந்தியத் தொழிலாளி வர்க்கம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தற்போது செப்டம்பர் 2இல் இந்திய தேசத்தின் இறையாண்மையைக் காக்க நடக்கவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் 20 கோடிக்கும் மேற்பட்ட உழைக்கும் மக்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அகில இந்திய அளவில் சுமார் 5 இலட்சம் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (அய்ஃபக்டோ) பங்கேற்க முடிவெடுத்துள்ளது. கடந்த 19.06.2015 & 08.08.2015 ஆகிய தேதிகளில் டெல்லியில் கூடிய அய்ஃபக்டோ தேசியச் செயற்குழு, அனைத்து உறுப்புச் சங்கங்களையும் இந்தப்போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் பல பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்க முடிவெடுத்துள்ளன.  இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதென 04.07.2015 அன்று நெல்லையில் கூடிய மூட்டா பொதுக்குழு முடிவு செய்துள்ளது. பெற்ற உரிமைகளைப் பாதுகாக்கவும், விலைவாசிக்கேற்ற ஊதிய உயர்வு காணவும், மக்கள் நலன் சார்ந்த கல்விக்கொள்கைகளை ஏற்படுத்திடவும் நாம் அனைவரும் 02.09.2015 அன்று நடைபெறவுள்ள ஒருநாள் வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்டு நமது தொழிற்சங்கக் கடமையை நிறைவேற்றுவோம்! 

கோரிக்கைகள்

மத்திய அரசே!

·          ஏழாவது UGC ஊதியக்குழுவை உடனே அமைத்திடு!

·          உயர்கல்விக்கு GDP யில் 2% நிதி ஒதுக்கிடு!

·          உயர்கல்வியை வணிகமயமாக்காதே! பொதுநிதியில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களை வலுப்படுத்து!

·          சுயநிதிப்பிரிவு மற்றும் பல்கலைக்கழக/உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு  UGC ஊதியம் வழங்கிடு!

·          உயர்கல்வி நிறுவனங்களில் அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்பிடு!

·          புதிய பென்சன் திட்டத்தை இரத்து செய்!

·          விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்து!

·          நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வாபஸ் வாங்கு!

·          அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ 15000/- நிர்ணயம் செய்!

·          தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றாதே!

·          எட்டுமணிநேர வேலையை உறுதிப்படுத்து! சமவேலைக்கு சம ஊதியம் கொடு!

·          காண்ட்ராக்ட்/ தொகுப்பூதியம்/பகுதிநேர ஊழியர்களை நிரந்தரப்படுத்து!

·          பாதுகாப்பு,காப்பீடு,வங்கி,உயர்கல்வி போன்ற துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே!

·          பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே!

·          EPF பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யாதே!

 

செப்டம்பர் 2 ஒருநாள் அகில இந்திய வேலை நிறுத்தம்

புதிய கோரிக்கைகளுக்கான போராட்டமல்ல.

பெற்ற உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கான வாழ்வாதாரப் போராட்டம். . .

விளைவுகளுக்காகப் போராடிச் சலித்தது போதும்.

செப்டம்பர் 2 - அனைத்துப்பகுதி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் 

நவீன தாராளமய, உலகமய, தனியார் மயக் கொள்கைகளுக்கு மரண அடி கொடுக்கும் நாள்! 

 

அனைவரும் பங்கேற்போம்! ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டுவோம்!



Back