Recent News
Recent Circulars
தலைவர் மடல் - மதச்சார்பின்மை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பில் சமூக ஆர்வலர்களோடும் படைப்பாளிகளோடும் நாம் ஒன்றுபட்டு நிற்பது மிகவும் அவசியம்
அன்பார்ந்த மூட்டா தோழர்களே,
வணக்கம்.
இந்த மடல் மூலம் மீண்டும் ஒருமுறை உங்களைச் சந்திப்பதற்கு கிடைத்த வாய்ப்பிற்காக பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தை அழித்து, பாசிசக் கலாச்சாரத்தைத் திணிக்கும் முயற்சிகள் சமீபகாலமாக மத்திய அரசின் துணையோடு நாடு முழுவதும் நடந்து வருகின்றன. இவற்றை விமர்சிக்கும் எழுத்தாளர்களும், கருத்தாளர்களும் மற்றும் பகுத்தறிவாளர்களும் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதுமான செயல்களும் நாள்தோறும் நடந்தேறுகின்றன. பகுத்தறிவாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்தபன்சாரே ஆகியோரைத் தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் கல்புர்கியும் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சமூக ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் தங்களுடைய சாகித்ய அகாடமி விருதுகளையும், இதர விருதுகளையும் திரும்ப ஒப்படைத்தும், சாகித்ய அகாடமியின் பொறுப்புகளிலிருந்து விலகியும் தங்களது எதிர்ப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழக எழுத்தாளர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டு மாமிசம் வைத்திருந்ததாக கூறி இஸ்லாமியர் அடித்து கொல்லப்பட்டதும், பாகிஸ்தான் பாடகர் குலாம் அலிகானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதும் சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்களாகும். மதச்சார்பின்மை அச்சுறுத்தப்படுவதையும், கருத்துச் சுதந்திரம் தாக்கப்படுவதையும் படைப்பு சமூகத்தோடு இணைந்து நாமும் கண்டிக்கிறோம். மேலும், மதச்சார்பின்மை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பில் சமூக ஆர்வலர்களோடும் படைப்பாளிகளோடும் நாம் ஒன்றுபட்டு நிற்பது மிகவும் அவசியம்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையானது புதிய கல்விக் கொள்கையை இந்துத்துவா கோட்பாடுகளுக்கேற்ப மாற்றியமைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர் அமைப்புகள், மாணவர்கள் ஆகியோரை கலந்தாலோசிக்காமல் உயர்கல்வியோடு சம்பந்தமில்லாதவர்களின் கருத்துக்களின் போர்வையில் உயர் கல்விக் கொள்கையை முடிவு செய்ய முயற்சிப்பது கடுங்கண்டனத்துக்குரியதாகும்.
இந்த நடவடிக்கைக்கெதிராகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் அய்பக்டோ கோரிக்கைகளின் மீதான செயலற்ற போக்கினை கண்டித்தும் நவம்பர் 24 அன்று டெல்லியில் அய்பக்டோ நடத்தும் மறியல் போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ளவேண்டியது அவசியம். மேலும் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்க டிசம்பர் 18 முதல் 20 வரை குஜராத்தில் நடக்கவிருக்கும் அய்பக்டோ மாநாட்டிலும் நாம் பெருமளவில் பங்கேற்று சிறப்பு செய்வோம்.
ஏற்கனவே இருந்த தன்னாட்சி அமைப்புகளைக் கலைத்து விட்டு அவற்றிற்குப் பதிலாக ஆளும் கட்சி அரசியல்வாதிகள் செல்வாக்கைப் பிரதிபலிக்கக்கூடிய அமைப்புகளை தோற்றுவிக்கும் முயற்சியை காங்கிரஸ் ஆட்சியைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைமையிலான அரசும் மேற்கொண்டுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த ‘கோலேஜியம்” என்ற அமைப்பு முறையை நீக்கி விட்டு “தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச்சட்டம் 2014” என்ற மசோதாவை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. இதனை எதிர்த்து உச்சநீதிமன்ற வக்கீல்கள் சங்கம் மற்றும் இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பில் தொடர்ந்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போதைய மத்திய அரசின் ‘நீதிபதி நியமன ஆணைய சட்டதிருத்த மசோதா’ அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஆகவே அது செல்லாது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை 9 நீதிபதிகள் அடங்கிய பேரமர்வுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ‘கோலேஜியம்’ முறை நீதிபதிகள் நியமனத்திலுள்ள குறைகளைக் களைந்திடவும் அனைத்து தரப்பினருக்கும் நீதி உத்தரவாதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும்.
நம் மன்றத்தின் மூன்றாவது கல்வி மாநாடு கடந்த செப்டம்பர் 26 அன்று சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த, உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம், தோழர்களே!
இவண்,
தோழமையுடன்
த. மனோகர ஜஸ்டஸ்