மூட்டா வரலாறு

மூட்டா

இன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் சுயநிதிக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர் களின் பலம் வாய்ந்த ஒரே சங்கமாக மூட்டா (MUTA) செயல்பட்டு வருகிறது. தமிழக மத்தியதர ஊழியர்கள் மத்தியில் மூட்டாவுக்கென ஒரு சிறப்பான இடம் கிடைத்திருக்கிறது. இச்சங்கம் தோன்றி வளர்ந்த வரலாறு மிகவும் சுவையானது. பலருக்கும் வழிகாட்டக் கூடிய படிப்பினைகளைக் கொண்டது.

வரலாற்றுப் பின்னணி

கல்லூரி ஆசிரியர்களுக்கு போராட்டப் பாதையையும் போர்க்குணத்தையும் முதலில் அறிமுகப் படுத்திய பெருமை தமிழகத்தின் தென்பகுதியில் பணிபுரிந்த கல்லூரி ஆசிரியர்களையே சாரும். இதற்கு 1970-களில் அப்பகுதித் தனியார் கல்லூரிகளில் நிலவிய பணிச்சூழல்களும் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட தலைமை கிடைத்ததுமே காரணம் எனலாம்.

1966-இல் மதுரையில் மதுரைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் அதன் பெயர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. பல்கலையின் முதல் துணைவேந்தராக தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பொறுப்பேற்றுக் கொண்டார். கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகவேண்டும் என்ற கருத்துடன் இருந்தவர் தெ.பொ.மீ. எனவே, அவர் காலத்தில் தென்பகுதியில் ஏராளமான கல்லூரிகள் தொடங்கப்பட்டன. கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகியதில் கிடைத்த மிகப் பெரிய நன்மை, அதுவரை உயர்கல்வி பெற அதிக வாய்ப்பில்லாத கிராமப்புற மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அதே சமயம், இந்த கல்வி பரவல் பல சுயநல சக்திகளும் சாதிய சக்திகளும் கல்வி வியாபாரிகளாக உருவெடுக்கவும் வழி செய்து விட்டது. “வீதிக்கொரு கல்லூரி, சாதிக்கொரு கல்லூரி” என்று பின்னாளில் கவிஞர் மீரா இப்போக்கினை வர்ணித்தார். கல்வி பரவ அன்று கொடுக்கப்பட்ட வாய்ப்பை பலர் இப்படித் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். தவறாக நிர்வகிக்கப்படும் கல்லூரிகள் (mismanaged colleges) என்ற சொற்றொடரும் புழக்கத்திற்கு வந்தது.

இந்தத் தீமையில் கிடைத்த ஒரு நன்மைதான் கல்லூரி ஆசிரியர் இயக்க வளர்ச்சி. தவறான நிர்வாகம் காரணமாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏராளமான இன்னல்கள் விளைந்தன. ஆசிரியர்களின் குமுறல் படிப்படியாக வெளிப்படத் தொடங்கியது. தங்களுக்கென சங்கம் வேண்டும், அந்த சங்கமும் போராடி உரிமைகளைப் பெற வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றி வளர்ந்தன.

ஆசிரியர்களின் பணிநிலை

இன்னாருக்கு இன்ன ஊதியம்தான் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் அப்போது கறாராக இல்லை. இது பல நிர்வாக முறைகேடுகளுக்கு வழிவகுத்தது... பல கல்லூரிகளில் மாத ஊதியம் பெறுவதிலேயே சிக்கல்கள் தோன்றின. மாதம் முதல் தேதியில் வரவேண்டிய ஊதியம் எந்தத் தேதியில் வரும் என்று தெரியாது. எந்த மாதம் ஊதியம் வரும் என்றும் தெரியாது. ஆசிரிய அலுவலர்களின் வாழ்க்கை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. மாதக்கணக்கில் ஊதிய பாக்கிகளை வைத்திருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகியது... மாத ஊதியம் பெறுவதிலேயே இவ்வளவு தகராறுகள் உள்ள இந்த `கவர்னர் உத்தியோக’மாவது நிரந்தரமா என்று கேட்டால் அதுவும் இல்லை. பணியில் சேர்ந்து எவ்வளவு ஆண்டுகள் கழித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதற்கெல்லாம் கண்டிப்பான விதிமுறைகள் கிடையாது. பல கல்லூரிகளில் கோடைவிடுமுறை முடிந்து கல்லூரி திறக்கும் சமயத்தில் தாளாளர் வீட்டுக்கு அல்லது கடைக்கு நடையாக நடந்துதான் ஆசிரியர் அந்த ஆண்டிற்கான தற்காலிக நியமன ஆணையை வாங்க முடியும்... மாணவர் எண்ணிக்கையை வைத்தே ஆசிரியர்களின் வேலைப்பளு நிர்ணயிக்கப்பட்டது. மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் அதன் காரணமாக பல ஆசிரியர்கள் பணி இழக்க வேண்டிய தாயிற்று... பல்கலைக்கழகம் பணியில் உள்ள ஆசிரியரின் கல்வித்தகுதியை திடீர் திடீரென மாற்றியமைத்தது. 1970-களின் தொடக்கத்தில் பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கை அடிப்படையில் பல கல்லூரிகளில் பணிபுரிந்து கொண்டிருந்த பட்டதாரி பயிற்றுநர், விளக்குநர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த இடங்களில் எம்.ஏ., எம்.எஸ்.சி கல்வித் தகுதியுடன் இருந்தவர்கள் நியமிக்கப்பட்டார்கள். பதவி உயர்வுக்கு வழியேயின்றி ஆண்டுக்கணக்கில் ஒரே பதவியில் இருக்க வேண்டிய நிலை குறித்து பயிற்றுநர், விளக்குநர்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர்... ஆசிரியர்களுக்கு ஓர் ஆண்டில் 12 நாட்கள் தற்செயல் விடுப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதையும் கூட பல கல்லூரி முதல்வர்கள்-குறிப்பாக பெண்கள் கல்லூரி முதல்வர்கள்-ஆசிரியர்களுக்கு வழங்க மறுத்தனர். மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஆகிய எந்த விடுப்புமே கிடையாது... ஓய்வூதியம் என்று பெயரளவில் ஒரு தொகை கொடுக்கப்பட்டது. வீட்டுவாடகைப்படியும் கொடுக்கப் படவில்லை... -இப்படி ஏராளமான பிரச்சனைகள் தனியார் கல்லூரி ஆசிரியர்களை வாட்டி வதைத்தன. ஆசிரியர்களின் உள்ளக் குமுறல்களுக்கு விரைவிலேயே ஒரு வடிவம் கிடைத்தது. ஏற்கனவே `பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்’ என்ற அமைப்பு தமிழகத்தில் செயல்பட்டு வந்தாலும், தென்பகுதியிலிருந்த கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூடுதல் கவனத்துடன் கவனிக்க மதுரைப் பல்கலைக்கழகப் பகுதியில் ஒரு சங்கம் தேவை என்ற முடிவிற்கு வந்தனர்.

மூட்டா தோற்றம்

மதுரைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேரவை அரங்கில் (தற்போது மு.வ. அரங்கு என அழைக்கப்படுகிறது) 19-4-1970 அன்று கூடிய ஆசிரியர்கள் `மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம் (Madurai University Teachers’ Association)’ என்ற அமைப்பைத் தோற்றுவிப்பதென முடிவு செய்தனர். பேராசிரியர் க. திருமாறன் தலைவராகவும் பேராசிரியர் நா. தர்மராஜன் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சங்கம் தோன்றிய உடனேயே பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. வெகு விரைவிலேயே போராட்டப் பாதையிலும் நடைபோடத் தொடங்கியது. இதைத்தான் மூட்டாவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் வெ. சண்முகசுந்தரம் “பிறக்கும்போதே தொப்புள் கொடியை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு போராடத் தொடங்கிய மாமன்றம்” என்று கூட்டங்களில் பெருமிதத்தோடு குறிப்பிடுவார். பிரச்சனைகள் ஒவ்வொன்றாகத் தீர்க்கப்பட்டன. அது தனி வரலாறு. 1973-74-லிலேயே அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFUCTO) நிகழ்ச்சிகளில் மூட்டா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கியது. இன்று மாநில அளவில் வேறு பல கல்லூரி ஆசிரியர் அமைப்புகளுடனும் ஆசிரியர்-அரசு ஊழியர் அமைப்புகளுடனும் இணைந்து பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சங்கமாக ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது மூட்டா.
 

Back