முதலாம் மற்றும் இரண்டாம் மண்டலச் சுற்றறிக்கை
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
வணக்கம்.
07-07-2011 தேதியிட்ட மூட்டாவின் மத்திய சுற்றறிக்கை தங்களுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும். இச்சூழலில் தங்களை இச்சுற்றிக்கையின் மூலம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
பேரா.வெ.சண்முகசுந்தரம் நினைவுநாள்: 19-07-2011 அன்று நெல்லையில் கூடிய பொதுக்குழு முடிவுப்படி 13-07-2011 அன்று மதுரை மூட்டா அலுவலகத்தில் பேரா.வெ.சண்முகசந்தரம் நினைவுநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாலை 5.30 மணிக்கு மூட்டாவின் முன்னாள் இணைப் பொதுச்செயலாளர் பேரா.க.சின்னசாமி மனோகரன் மன்றத்தின் கொடியினை ஏற்றிவைத்து நினைவுநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ’சமச்சீர் கல்வி’ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்றத்தின் தலைவர் பேரா.எஸ்.விவேகானந்தன் தலைமை தாங்கினார். இரண்டாம் மண்டலத் தலைவர் பேரா.என்.தேன்பாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர் பேரா.பொ.இராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார். இரண்டாம் மண்டலச் செயலாளர் பேரா.எஸ்.கல்யாணராமன் நன்றிகூற விழா நிறைவுபெற்றது.
அய்ஃபெக்டோ செய்திகள்: புதிய பென்சன் திட்டத்தினை கைவிடக்கோரியும், பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட பேரா.தியாகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையினை வெளியிடக் கோரியும், பல்கலைக்கழக மானியக்குழு திருத்தப்பட்ட ஊதியம் வழங்குவதற்கான மானியத்தினை மாநில அரசுகளுக்கு உடனடியாக வழங்கக் கோரியும், கல்வியில் தனியார்மயத்தை உடனடியாக கைவிடக் கோரியும் பல்கலைக்கழக மையங்களில் 30-07-2011 அன்று ஆர்ப்பாட்டம், டெல்லியில் 26-08-2011 அன்று பாராளுமன்றம் நோக்கிப் பேரணி மற்றும் தர்ணா நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ஜே.ஏ.சி கையெழுத்து இயக்கம்: 2009 செப்டம்பருக்குப்பின் பணிமேம்பாட்டினை அடைந்திட்ட ஆசிரியர்களுக்கு இதுகாறும் பணிமேம்பாடு வழங்கப்படாத சூழலில், பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகள் தமிழக அரசு இதழில் வெளியிடப்படும் நாள் வரையிலான இடைப்பட்ட காலத்தில், அனைத்து ஆசிரியர்களுக்கும் உரிய பணிமேம்பாட்டினையும், தேர்வுநிலை விரிவுரையாளராக மூன்றாண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்களுக்கு இணைப்பேராசிரியர் பணிமேம்பாட்டினையும் நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் உடனடியாக வழங்கிட வேண்டி 21-07-2011 அன்று தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுப்பது என ஜே.ஏ.சி. முடிவாற்றியுள்ளது. இத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தினை உறுப்பினர்களிடம் கையெழுத்தினைப் பெற்று அனுப்பி வைக்குமாறு கிளைச் செயலாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
மண்டல செயற்குழுக் கூட்டம்: மூட்டா முதலாம் மற்றும் இரண்டாம் மண்டலங்களின் இணைந்த செயற்குழுக் கூட்டம் 13-07-2011 அன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரிப் பிரச்சினை மற்றும் மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணைஇயக்குநரின் செயல்பாடுகள் மற்றும் அவரது அலுவலகத்திலுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
விருதுநகர் செந்திக்குமார நாடார கல்லூரி நிர்வாகம் அக்கல்லூரிக்குத் தன்னாட்சி முறையினைப் பெற மேற்கொண்ட வழிமுறைக்கு எதிராக அக்கல்லூரி மூட்டாக்கிளை சார்பாகவும், மண்டலத்தின் சார்பாகவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். அக்கல்லூரி மூட்டா கிளைச் செயலாளர் பேரா.முத்தரசு தற்காலிகப் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கணிதத்துறைப் பேராசிரியர்கள் மோகன் மற்றும் செழியன், தமிழ்த்துறைப் பேராசிரியர் சண்முகவேல் ஆகியோருக்கு ஊதிய வெட்டு, இயற்பியல் துறை மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களுக்கு குறிப்பாணைகள் என்று தொடர்ச்சியாக பழிவாங்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வருகின்றது. 05-07-2011 அன்று கல்லூரிக்கு வருகைபுரிந்த பல்கலைக்கழக மானியக்குழுவின் நிபுணர் குழுவைச் சந்திக்க முயன்ற தமிழ்த்துறை மாணவ மாணவியர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகின்றனர். வணிகவியல் துறையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிபுணர் குழு வந்த தினத்தன்று வகுப்பு புறக்கணிப்பு செய்ததாகக் கூறி உரிய ஆணைகளின்றி வாய்மொழியாக வகுப்பிற்கு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. தன்னாட்சி வராமலேயே கல்லூரி நிர்வாகம் இவ்வளவு அராஜகமாக நடப்பின், தன்னாட்சி பெற்றுவிட்டால் சர்வாதிகார ஆட்சியே இந்தக் கல்லூரியில் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. கல்லூரி நிர்வாகத்தின் இப்பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணைஇயக்குநரும் துணைபோகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது குறித்து கீழ்க்காணும் இயக்க நடவடிக்கைகளை மேற்கோள்ள கூட்டு மண்டலச் செயற்குழு முடிவு செய்துள்ளது.
1. விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி மூட்டா கிளையின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் முகமாக பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தினை மண்டலத்திலுள்ள அனைத்துக்கிளைகளும் தங்களது கிளை லெட்டர் பேடில் டைப் செய்து 21-07-2011 அன்று பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
2. மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆசிரியர் - அலுவலர்களின் பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. 1-1-2006 க்குப் பின் பணிமேம்பாடு பெறத் தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு மற்ற மண்டலங்களில் பணிமேம்பாடு வழங்கப்பட்டுள்ளபோதிலும், மதுரை மண்டலத்தில் மட்டும் இதுகாறும் வழங்கப்படாமலும் இதுகுறித்து செய்யப்பட்ட முறைகேடுகளுக்கு செவி சாய்க்காத நிலையும் உள்ளது. பி.எச்டி. ஊதிய உயர்வு, பணியில் மூத்தோரைவிட இளையோர் கூடுதலாக பெறும் ஊதிய முரண்பாடு போன்ற பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. எனவே இப்பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க கோரி 18-07-2011 அன்று மாலை 4.00 மணி அளவில் மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அவர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்வது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
3. நிலுவையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதிலும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்ட விசயத்திலும் மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அவர்கள் சங்கப் பொறுப்பாளர்களோடு விரோத மனப்பான்மையோடு செயல்பட்டு வருகின்றார். தனது அதிகார வரம்பினை மீறி செயல்படும் அவரை மாற்றக்கோரி மூட்டா-டான்சாக் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தினைத் தங்களது கிளை லெட்டர் பேடில் டைப் செய்து 19.07.2011 அன்று மாண்புமிகு தமிழக உயர்கல்வி அமைச்சர், உயர்கல்வித் துறைச் செயலாளர் மற்றும் கல்லூரிக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்காண் இயக்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்திட உறுப்பினர்கள் பெருவாரியாகக் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
தோழமையுடன்
ஏ.டி.செந்தாமரை கண்ணன் எஸ்.கல்யாணராமன்
செயலாளர் - முதலாம் மண்டலம் செயலாளர் - இரண்டாம் மண்டலம்
பொறுப்பாளர்கள் கவனத்திற்கு:
ஜூலை 19 மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரை மாற்றக் கோரி பேக்ஸ் அனுப்புதல்
ஜூலை 21 விருதுநகர் செந்திக்குமார நாடர் கல்லூரி பிரச்சனை தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு பேக்ஸ் அனுப்புதல்
ஜூலை 21 ஜேஏசி கோரிக்கையினை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
ஜூலை 30 பல்கலைக்கழக மையங்களில் அய்ஃபெக்டோ கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம்
ஆகஸ்ட் 04 சுயநிதி ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளை வென்றெடுக்க மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம்
ஆகஸ்ட் 26 டெல்லியில் அய்ஃபெக்டோ கோரிக்கைகளுக்காக பாராளுமன்றம் நோக்கி பேரணி
மூட்டா கட்டிட வளர்ச்சி நிதியினை இதுவரை அளிக்காத கிளைகள் உடனடியாக அனுப்பி வைத்திடவும்
மத்திய மற்றும் மண்டல சந்தா பாக்கியினை உடனடியாக அனுப்பி வைத்திடவும்