Recent News

Recent Circulars

பொதுச் செயலாளர் கடிதம் - கருத்துரிமை காத்திடுவோம்! மதச்சார்பின்மையைப் பேணிடுவோம்!

அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களே!

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு (கடந்த பேச்சு வார்த்தை அக்டோபர் 2010 இல் நடந்தது) தமிழக உயர்கல்விச் செயலர் ஜே.ஏ.சி. டான்சாக்குடன் 07.10.2015 அன்று ஜே.ஏ.சி. டான்சாக் கோரிக்கைகள் மீது பேச்சு வார்த்தை நடத்தினார். உயர்கல்வித் துணைச்செயலர், கல்லூரிக்கல்வி இயக்குநர் மற்றும் மண்டல இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் 01.10.2006க்குப் பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணிமேம்பாட்டினை யு.ஜி.சி. விதிமுறைகள்-2000த்தின் படி அவர்கள் பணிமேம்பாட்டிற்குத் தகுதியான நாளிலிருந்து வழங்குதல், மூத்த ஆசிரியர்களுக்கு 01.01.1996 முதல் பணி மேம்பாடு வழங்குதல் மற்றும் தேர்வு நிலை விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ரூ. 14940/- உயர் ஊதியம் வழங்குதல், 2013 பிப் 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தக் கால ஊதியம் வழங்குதல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பான இயக்குநர் ஆணையை அமல்படுத்துதல், ஆசிரியர் மற்றும்  அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் அலுவலர் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க உயர்கல்விச்செயலர் உறுதியளித்துள்ளார். பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது ஆணைகள் பெறவும், தேவைப்பட்டால் பொருத்தமான இயக்கங்களை நடத்திடவும் ஜே.ஏ.சி. டான்சாக் திட்டமிடும். 
மூட்டாவின் மூன்றாவது கல்வி மாநாடு கடந்த 26.09.2015 அன்று நாகர்கோவில் ஸ்ரீ ஐயப்பா கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சமகால உயர்கல்விப் பிரச்சனைகள் என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய அரசு தற்போது அமலாக்கி வரும் கல்விக் கொள்கைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் திரு. அருண்குமார் மற்றும் அய்பெக்டோ முன்னாள் தலைவர் பேரா. ஜேம்ஸ் வில்லியம் ஆகியோர் விளக்கிப் பேசினர். பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. கட்டுரைகளைத் தொகுப்பாகக் கொண்டு வர வேண்டியுள்ளது. 
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இனியும் அய்பெக்டோவின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பதாக இல்லை. யூ.ஜி.சி 7ஆவது ஊதிய நிர்ணயக்குழு அமைத்தல், யூ.ஜி.சி. விதிமுறைகளுக்கான திருத்தங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளிப்பது, மத்தியப் பல்கலைக்கழகச் சட்டங்கள் திருத்தத்தை வாபஸ் வாங்குவது, தெரிவு முறைப் பாடத் திட்டத்தை வாபஸ் வாங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 24.11.2015 அன்று புது டெல்லியில் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அய்பெக்டோ அறைகூவல் விடுத்துள்ளது. அதையொட்டி 23.11.2015 அன்று கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கம் ஒன்றுக்கும் அய்பெக்டோ ஏற்பாடு செய்துள்ளது. மேலும் 2015 டிசம்பர் 18, 19, 20இல் குஜராத் மாநிலம் அம்பாஜியில் அய்பெக்டோவின் பொது மாநாடு நடைபெறவுள்ளது. மேற்கண்ட அய்பெக்டோ நிகழ்ச்சிகளுக்கு கிளைகளில் இருந்து அதிக உறுப்பினர்கள் கலந்து கொள்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
மத்தியில் ஆளும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து தனது மக்கள் விரோதக் கொள்கைகளை அமலாக்கி வருகிறது. ஆன் லைன் வர்த்தகம் காரணமாக, பருப்பு மற்றும் உணவு எண்ணெய் வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. வேலையின்மை வறுமையும் பெருகியுள்ளது. மக்களின் அமைதியான வாழ்வைச் சீர்குலைக்கும் வகையில், ‘மாட்டிறைச்சி’ அரசியலை இந்துத்துவவாதிகள் கையிலெடுத்துள்ளனர். இதற்கு அப்பாவிகள் சிலர் பலியாகியுள்ளனர். ஆட்சிப் பொறுப்பில் உள்ள அமைச்சர்களும் இதற்கு ஆதரவாக பேசும் அவலம். இத்தகைய நடவடிக்கைகள், நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு கேடு விளைவிப்பதோடு, ஏழை எளிய மக்களின் உணவு உரிமைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
மதச்சார்பின்மை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, மற்றும் பகுத்தறிவு குறித்து எழுதியும் பேசியும் வந்த நரேந்திர தபொல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் பேரா. கல்பொர்கி ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாடெங்கிலும் மாற்றுக் கருத்துச் சொல்வோருக்கு எதிராக அராஜகக் கொலை மிரட்டல்கள் தொடர்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டிய பிரதமர் நீண்ட மௌனத்திற்குப் பிறகு, பொத்தாம் பொதுவாக மக்கள் அமைதி காக்கும்படி அறிக்கை விடுகிறார். இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கெதிராக குரல் எழுப்புவது மூட்டா உள்ளிட்ட அனைத்து ஜனநாயக இயக்கங்களின் உடனடிக் கடமையாகும். தொடர்ந்து பேசுவோம் தோழர்களே.

தோழமையுடன்,
எஸ். சுப்பாராஜு
பொதுச்செயலாளர்



Back