தனியார் சுயநிதி ஒருமைப் பல்கலைக்கழகம் தேவையற்றது - ராமதாஸ்
அனைத்து தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி கோவை பி.எஸ்.ஜி. கல்லூரிகளையும், மதுரை தியாகராஜர் கல்லூரிகளையும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து தனியார் சுயநிதி ஒருமைப் பல்கலைக்கழக திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் உயர்கல்வித்துறைக்கு, அம்முயற்சியை கைவிடும்படி முதல்வர் கருணாநிதி உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும், தனியார் சுயநிதி ஒருமைப் பல்கலைக்கழகம் தேவையற்றது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் நிதியுதவியுடன் இதுவரையில் வளர்ந்து வளர்ச்சி அடைந்துள்ள கோவை பி.எஸ்.ஜி. கல்லூரிகளையும், மதுரை தியாகராஜர் கல்லூரிகளையும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, தனியார் சுயநிதி ஒருமை பல்கலைக்கழகங்களாக மாற்றும் முடிவை மாநில உயர்கல்வித் துறை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்தக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், பயிற்றுவித்து வரும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அங்கு பணியாற்றும் இதர ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதற்காக போராடியும் வருகிறார்கள்.
சமூகநீதிக்கு எதிரான, ஏழை, எளிய மக்களுக்கு பாதகமான இந்த முடிவை கைவிட வேண்டும் என்று பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் வாதாடி வருகின்றன. மாநில சட்டப்பேரவையில் இதற்கான சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்ட போது, அதை கடுமையாக எதிர்த்திருக்கின்றனர். அதன் விளைவாக ஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்ட அந்த சட்ட முன்வடிவை நிறைவேற்றிட உயர்கல்வித்துறை அவசரம் காட்டி வருவது அதிர்ச்சியாக உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்த இரு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவசக் கல்வி மறுக்கப்பட்டு விடும்.
தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களைப் பொறுத்த வரை அரசு நிருணயித்த குறைந்த அளவிலான கல்விக் கட்டணம் மறுக்கப்பட்டு, இதர சுயநிதிக் கல்லூரிகளைப் போன்று கட்டணக் கொள்ளையில் சிக்கித் தவிக்க நேரிடும். எல்லாவற்றிற்கும் மேலாக தற்போதுள்ள சுயநிதி பல்கலைக்கழகங்களில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதைப்போல, இந்த இரு சுயநிதி ஒருமை பல்கலைக்கழங்களிலும் இடஒதுக்கீடு சலுகை மறுக்கப்பட்டு, அதன்மூலம் சமூகநீதிக்கு சம்மட்டி அடி விழுந்துவிடும்.
இந்த புதிய சுயநிதி பல்கலைக்கழங்களோடு இணைந்த கல்லூரிகளிலும் இனி உயர்கல்வி வணிகமயமாக்கப்பட்டு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும். இந்தக் கட்டணக் கொள்ளையை தடுக்க அரசு தலையிட முடியாது. ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்காது. மாணவர் சேர்க்கை தகுதி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இல்லாமல், கட்டணக் கொள்ளையின் அடிப்படையில் நடைபெறும். ஆசிரியர்கள், அலுவலர்கள் பணி இழப்பிற்கு ஆளாவார்கள். இங்கு பணியாற்றுகின்ற ஆசிரியர்களும், அலுவலர்களும் அரசு ஊழியர் என்ற அந்தஸ்தை இழந்து தனியார் ஊழியர்களாக மாற்றப்பட்டு அவர்களின் கெடுபிடிக்கும் ஆளாவார்கள்.
இதுபோன்ற எண்ணற்ற கேடுகளுக்கு வழிவகுக்கும் தனியார் சுயநிதி ஒருமைப் பல்கலைக்கழகம் தேவையற்றது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பல்வேறு அரசியல் கட்சிகள் ஆகியோரின் கோரிக்கைகளுக்கும், வேண்டுகோளுக்கும் மதிப்பளித்து இந்த முடிவை அரசு கைவிட வேண்டும்.
அனைத்து தரப்பினரின் எதிர்ப்புகள் அனைத்தையும் மீறி தனியார் சுயநிதி ஒருமைப் பல்கலைக்கழக திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் உயர்கல்வித்துறைக்கு, அம்முயற்சியை கைவிடும்படி முதல்வர் உரிய ஆணை பிறபிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.