ஆசிரியர், மாணவர்களை பாதிக்கும் எந்த முடிவையும் அரசு எடுக்காது - முதல்வர் கருணாநிதி

ஒருமைப் பல்கலைக்கழக விவகாரத்தில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாதிக்கும் எந்த முடிவையும் உயர் கல்வி துறையோ, இந்த அரசோ எடுக்காதுஎன்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் கருணாநிதி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளை தனியார் சுயநிதி ஒருமைப் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு தமிழக உயர்கல்வித் துறையின் சார்பில் முயற்சித்து வருவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு சில ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதே கருத்தினை பாமக நிறுவனர் ராமதாசும் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் குறித்த செய்தியினை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடு அந்த செய்தியில், 2008ல் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் ஒருமைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட முன் வரைவை உயர் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் கொண்டு வந்ததாகவும், அந்த சட்ட முன் வடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் நானே எழுந்து அந்த சட்ட முன் வரைவு பேரவையின் தேர்வு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், ஆசிரியர்களையோ, மாணவர்களையோ பாதிக்கும் எந்த முடிவையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்றும் உறுதி அளித்ததாகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

நான் கூறியவாறே அந்த சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேறாமல், தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு விட்டது. பேரவையின் தேர்வு குழுவிலும் எந்த முடிவும் எடுக்கப்பட்டு விடவில்லை. பேரவையின் தேர்வு குழு 14.12.2010 அன்று கூடுவதாக இருந்தது.  அதுவும்கூட, மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு விட்டது. மேலும் அந்த சட்ட முன் வடிவை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியிலும் உயர் கல்வித்துறை ஈடுபடவில்லை. இதற்கிடையே ஒரு சில ஆசிரியர் சங்கங்கள் பேரவையின் பொறுப்பு குழு 14ம் தேதி கூடி எங்கே முடிவெடுத்து விட போகிறார்களோ என்று நினைத்து கொண்டு முன்கூட்டியே போராட்டத்தை அறிவித்து நடத்துகிறார்கள்.

பேரவையில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாதிக்கும் எந்த முடிவையும் இந்த அரசு எடுக்காது என்று நான் கொடுத்த உறுதி மொழிக்கு மாறாக எந்த விதமான நடவடிக்கையையும் இந்த அரசோ, உயர் கல்வித் துறையோ எடுக்காது. எனவே ஒருமை பல்கலைக்கழகங்களாக்கும் முயற்சியில் இந்த அரசின் உயர் கல்வி துறை ஈடுபட்டிருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்த தேவையில்லை.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=9157

Back