திருச்சியில் கூடிய JAC அவசர செயற்குழு கல்லூரிகளை ஒருமைவகைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் தமிழக அரசின் முயற்சிக்கெதிராக போராட்டத் திட்டங்களை அறிவித்தது

 

திருச்சியில் கூடிய JAC அவசர செயற்குழு கல்லூரிகளை ஒருமைவகைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் தமிழக அரசின் முயற்சிக்கெதிராக போராட்டத் திட்டங்களை அறிவித்தது

 

தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவின் அவசர செயற்குழு கடந்த 15-01-2010 அன்று திருச்சியில் கூடியது.

 

அக்கூட்டத்தில் கல்லூரிகளை ஒருமை வகைப் பல்கலைக்கழகமாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவானது, ஜனவரி 28, 29 ஆகிய நாட்களில் கல்லூரி ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களைச் சந்தித்து கருத்து கேட்கிறோம் என்ற போர்வையில் மூட்டா, ஏயூடி, ஜிசிடிஏ சங்கங்களுடன் மேலும் இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்பதாக அழைத்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

கூட்டத்தில் ஜனவரி 28, 29 கூட்டங்களைப் புறக்கணிப்பது எனவும், இது குறித்து தமிழக முதல்வர், மற்றும் துணை முதல்வர் அவர்களுக்கு இக்குழுவினைக் கலைத்திடக் கோரி உடனடியாக அனைத்து கிளைகளிலிருந்தும் ththதொலைநகலில் கடிதம் அனுப்புவது எனவும், ஜனவரி 28ஆம் நாளன்று சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தினை நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

 

தொலைநகல் கடிதத்திற்கான செய்தி :

 

பெறுநர்:

 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்

தமிழ்நாடு அரசு

தலைமைச் செயலகம்

சென்னை 600 009

 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு

வணக்கம்.

ஏழை எளிய மக்களின் கல்விக் கோவில்களாக விளங்கி வரும் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை ஒருமை வகைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் உயர்கல்வித் துறையின் கொள்கை அறிவிப்பினை கைவிடக் கோரி, தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) வேண்டியதை ஏற்று, தாங்கள் 28.08.2008 நாளிட்ட கடிதத்தில் “கல்லூரி ஆசிரியர்களையோ, மாணவர்களையோ பாதிக்கும் எத்தகைய முடிவினையும் இந்த அரசைப் பொறுத்தவரையில் மேற்கொள்ளாது” என்பதை அன்புடன் தெரிவித்திருந்தீர்கள். கடந்த டிசம்பர் 20ம் தேதி நடைபெற்ற        JAC பொதுக்குழு, இக்கொள்கை முடிவினை நிரந்தரமாக கைவிடக் கோரியும், இதற்கென உயர்கல்வித்துறை உருவாக்கிய கல்வியாளர் குழுவினை உடனடியாக கலைத்திட வேண்டும் எனவும் தமிழக அரசை வேண்டிடும் தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது.

 

இந்நிலையில், உயர்கல்வித்துறை இப்பிரச்சனையினை ஆராய்ந்திட ஏற்படுத்திய கல்வியாளர் குழு, தன்னிச்சையாக முடிவு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆரம்பத்தில் ஒருவரையும் சந்திக்க மறுத்த இக்குழு, தற்போது இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, இது வரையில் கல்லூரிகளில் செயல்பட்டிராத, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போன்ற பல பெயர் தெரியாத அமைப்புகளை எல்லாம் ஜனவரி 28 மற்றும் 29 தேதிகளில் அழைத்து, போலியான ஒரு நாடகத்தினை அரங்கேற்றிட முனைந்துள்ளது.

 

கல்வியாளர் குழுவினை உடனடியாக கலைத்திட வேண்டும் எனவும், சமூக நீதி நிரந்தரமாக மறுக்கப்பட்டு ஏழைகளின் உயர்கல்வியை நிரந்தரக் கேள்விக் குறியாக்கக் கூடிய, மிக மோசமான பின் விளைவுகளை உருவாக்கக் கூடிய “அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை ஒருமைவகைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும்” கொள்கை முடிவினைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழக முதல்வரை பணிவுடன் வேண்டுகிறோம்.

 

நம்பிக்கையுடன்,

 

தங்கள் உண்மையுள்ள

 

 

 

நகல்:

மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள், தமிழ்நாடு அரசு

உயர்திரு உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றம்

Back