ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைக்க அனுமதி கோரும் மசோதா குறித்து 29-03-2011 தினமணி தலையங்கம்

பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தால், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் நிழல் மனிதர்களின் பாடு கொண்டாட்டமாகிவிடும்  -  தினமணி நாளிதழ்

 

தலையங்கம்:என்ன உறவோ, என்ன பிரிவோ!

 

ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பதுதான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.

 மக்கள்தொகையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட இல்லாத நிலையில் வாழும் நாட்டில், பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் மட்டுமே பயனடையும் திட்டங்களையும் கொள்கைகளையும் அரசு கடைப்பிடிக்குமேயானால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துத் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இருவேறு பொருளாதாரக் கொள்கைகளை உடையவையாக இருந்தால் மட்டுமே தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்.

 பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைக்க அனுமதி கோரும் மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையில் அந்த மசோதாவை நிறைவேற்றப் போதுமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கவில்லை. நிலைமையைச் சட்டெனப் புரிந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் பட்டாச்சார்யா, மசோதாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தக்கோரி அவைத்தலைவரின் அனுமதியும் பெற்றுவிட்டார்.

 எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்ன செய்திருக்க வேண்டும்? மசோதாவைத் தோற்கடிப்பதால் ஆட்சி கவிழ்ந்துவிடாதுதான். ஆனால், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைவது தடுக்கப்படாவிட்டாலும் அந்த முயற்சி ஒத்திவைக்கப்படும். யார் யாரிடம் பேசினார்களோ, யார் யாருக்கு வழிகாட்டினார்களோ தெரியாது, அரசுக்கு ஆதரவாகப் பிரதான எதிர்க்கட்சி வாக்களித்து, மன்மோகன் சிங் அரசைத் தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. உடனடியாக மசோதா சட்டமாக்கப்பட்டுவிடாது என்றாலும், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டதால், இனி சட்டமாக்குவது எளிதுதானே.

 இதனால் சகலருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தால், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் நிழல் மனிதர்களின் பாடு கொண்டாட்டமாகிவிடும்!

Note

This News is with an attachment file.


Back