புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலுள்ள பாதகமான அம்சங்களைக் களைய தமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு

TAMILNADU FEDERATION OF GOVERNMENT EMPLOYEESS AND TEACHERS’ ORGANISATIONS

(TANFETO)

எம்.ஆர்.அப்பன் இல்லம்

எண்.46, தேரடித் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.

தொலை பேசி எண்.28441286, 2844.938 பேக்ஸ் 28443601

 

சுற்றறிக்கை எண்.1/2012 
நாள்.
31-08-2012

 

அன்புடையீர், வணக்கம். 

தமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் 30-08-2012 அன்று மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.முருக.செல்வராசன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், மதுரை காமராசர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (மூட்டா), தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவுகள்

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலுள்ள பாதகமான அம்சங்களைக் களையக் கோரி கீழ்க்கண்டவாறு இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

1. வருகின்ற 6-9-2012 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில மையம் சார்பில் தமிழக அரசுக்கு முறையீடு கொடுப்பது.

2. அக்கோரிக்கைகளை வலியுறுத்தி 20-09-2012 அன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது.

3. முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திடும் பொருட்டு அதற்கென கூட்டமைப்பின் மாவட்ட அளவிலான கூட்டங்களை 13-09-2012 அன்று நடத்துவது. அதில் மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கான நோட்டீஸ், வால்போஸ்டர்களை வடிவமைத்து மாவட்ட அமைப்புகள் கூட்டமைப்பின் பெயரில் அச்சிட்டு பிரச்சார நடவடிக்கைகளை விரிவான அளவில் மேற்கொள்வது. இதற்கான செலவுகளை மாவட்ட அமைப்புகள் பகிர்ந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

4. இக்கூட்டமைப்பின் சார்பிலான சுற்றறிக்கைகளை தயாரித்து அனுப்புவதற்கான பணிகளையும், கூட்டங்களை கூட்டுவதற்கான பணிகளையும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பொறுப்பேற்றுச் செய்வதென முடிவு செய்யப்பட்டது.

5. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி 50சதவீதம் ஊதியத்துடன் இணைத்தல் உள்ளிட்ட பொதுவான கோரிக்கைகளுக்கான கூட்டு இயக்கங்கள் குறித்து பின்னர் தீர்மானிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள்

1. அரசு ஊழியர் மற்றும ஆசிரியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சந்தா தொகை ரூ.150/- வீதம் பிடித்தம் செய்வதை ரத்து செய்து மாதந்தோறும் ரூ.50/- வீதம் பிடித்தம் செய்து மருத்துவச் செலவுத் தொகை ரூ.4 லட்சம் வழங்க வேண்டும்.

2. உயிரைப் பாதுகாக்க வேண்டிய அவசர நிலையில் அதற்கான சிகிச்சையினை இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும், எந்த மருத்துவமனையில் மேற்கொண்டாலும் அதற்கான செலவுத்தொகையை வழங்கிட வேண்டும்.

3. காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனைகள் நாடு முழுவதும் விரிவான அளவில் அங்கீகரிக்கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.

4. குடும்ப உறுப்பினர் பட்டியலில் பெற்றோர் இணைக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு வயது உச்சவரம்பின்றி சிகிச்சைக்கான கட்டணம் வழங்கப்பட வேண்டும்.

5. அரசாணையில் குறிப்பிட்டபடி கட்டணமில்லா சிகிச்சை (CASHLESS TREATMENT) என்பது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

6. மாவட்ட மற்றும் மாநில அளவிலான காப்பீட்டுத் திட்டக் குறை தீர்க்கும் குழு கூட்டங்கள் மாதந்தோறும் முறையாகக் கூட்டப்பட வேண்டும். அக்கூட்டங்களில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்வு காணப்படவேண்டும்.

தோழர்களே !

நமது ஒற்றுமையினை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திடவும், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வென்றெடுத்திடவும் மீண்டும் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்துள்ளதை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் விரிவாகப் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வகையில் உரிய திட்டமிடலை மேற்கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

தோழமையுடன்,

TANFETO அமைப்பிற்காக

Back