ஜேஏசி – டான்சாக் சார்பில் சுயநிதி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பணி மேம்பாடு கோரி முன்னாள் நீதியரசர் சந்துரு அவர்களால் துவக்கி வைக்கப் பெற்று மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கம்


பேரா.மனோகர ஜஸ்டஸ் (மூட்டா), பேரா.ரவிச்சந்திரன் (ஜேஏசி-டான்சாக் கூட்டமைப்பு)

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சந்துரு அவர்களின் துவக்க உரை

அய்ஃபக்டோ தேசியச் செயலர் பேரா.ஜெயகாந்தி அவர்களின் சிறப்புரை

பேரா.சுப்பாராஜூ(மூட்டா),பேரா.தமிழ்மணி,(ஜிசிடிஏ),திரு.கனகராஜன்(டான்சாக்),பேரா.விவேகானந்தன்(அய்ஃபக்டோ

பேரா.காந்திராஜன (ஏயூடி), பேரா.பாண்டி (ஜேஏசி-டான்சாக் கூட்டமைப்பு)

கருத்தரங்கில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்

தமிழக கல்லூரி ஆசிரியர்களின் கூட்டமைப்பு (ஜே.ஏ.சி) மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் (டான்சாக்) இணைந்த ஜேஏசி-டான்சாக் கூட்டமைப்பின் சார்பில் சுயநிதி வகுப்பு / கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு அரசு ஊதிய மானியம் மற்றும் பணி மேம்பாடு கோரி ஒரு நாள் மாநில அளவிலான கருத்தரங்கம் 29.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 50 பெண் ஆசிரியைகள் உள்ளிட்ட சுமார் 300 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய மூட்டாவின் தலைவர் பேரா.T.மனோகர ஜஸ்டஸ்., சுயநிதிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர், அலுவலர்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு மூட்டா முன்னின்று இதுகாறும் நடத்தி வந்துள்ள இயக்கங்களை நினைவு கூர்ந்தார்.

ஜே.ஏ.சி.-டான்சாக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பேரா.M.ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்ற, இக்கருத்தரங்கினைத் துவக்கிவைத்து கருத்துரையாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் திரு.K..சந்துரு அவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் அலுவலர்களின் சமூக அந்தஸ்தானது சதுர்வர்ணத்திலுள்ள பஞ்சமர்களைப் போலுள்ளதாக குறிப்பிட்டு, சுயநிதி வகுப்பு / கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்காக ஜே.ஏ.சி.-டான்சாக் அமைப்பானது தொடரியக்கங்களை நடத்தி கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டுகோள் விடுத்தார். சுயநிதி கல்லூரி ஆசிரியர் மற்றூம் அலுவலர்களின் பணிநிலை மேம்பாடு அடைய தெளிவான மசோதா ஒன்றினைக் கொண்டுவர அனைத்து ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களும் இணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அய்பெக்டோவின் தேசியச் செயலாளர் பேரா.P.ஜெயகாந்தி தமது சிறப்புரையில், நாட்டில் வேகமாகப் பெருகிவரும் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் இக்கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்-அலுவலர்களின் பணிநிலை குறித்து சுட்டிக் காட்டி,. இந்த ஆசிரியர்-அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க ஜே.ஏ.சி.-டான்சாக் அமைப்பானது முனைந்திருப்பதை வெகுவாகப் பாராட்டினார்.

மூட்டாவின் பொதுச்செயலாலர் பேரா.S.சுப்பாராஜூ, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் பேரா.S.தமிழ்மணி, மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.P.கனகராஜன் ஆகியோர் சுயநிதி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் ஊதியம் மற்றும் சுயநிதி கல்லூரி நிர்வாகங்களின் பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆகிய பிரச்சனைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

அய்பெக்டோவின் துணைத் தலைவர் பேரா.S.விவேகானந்தன் கருத்தரங்கினை ஏற்பாடு செய்த ஜே.ஏ.சி-டான்சாக் கூட்டமைப்பைப் பாராட்டினார். தமிழகத்தில் உயர்கல்வியில் தனியார்மயம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை எடுத்துரைத்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் பேரா.J.காந்திராஜன் கருத்தரங்கத் தீர்மானங்களை முன்மொழிந்தார். ஜே.ஏ.சி.-டான்சாக் கூட்டமைப்பின் பொருளாளர் பேரா.R.பாண்டி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

கவன ஈர்ப்பு கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.சுயநிதிக் கல்லூரி / வகுப்பு ஆசிரியர், அலுவலர்களின் பணிப்பாதுகாப்பு, பணிநிலைகள் தொடர்பான தீர்மானம்

தமிழகத்தில் 1982க்குப் பிறகு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், உதவிபெறும் கல்லூரிகளில் துவக்கப்படும் புதிய வகுப்புகளும் அரசு மானியமின்றி சுயநிதிக்கல்லூரி / வகுப்புகளாகச் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களும், அலுவலர்களும் மிகக் குறைந்த ஊதியத்தில் சிறப்பாகக் கல்விப் பணியினைச் செய்துவருகின்றனர். இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. பணிப்பாதுகாப்பு இல்லாத நிலையில், எந்த நேரத்திலும் நிர்வாகங்கள் தங்கள் விருப்பம்போல் ஆசிரியர்களையும், அலுவலர்களையும் பணிநீக்கம் செய்யும் கொடிய செயல் நடந்து கொண்டிருக்கின்றது. பணிநியமன ஆணை, பணிப்பதிவேடு பராமரித்தல், பணிநிரந்தரம், தற்செயல்விடுப்பு, மகளிருக்குப் பேறுகால விடுப்பு போன்ற சட்டப்படியான உரிமைகள் வழங்கப்படாமல் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர். சமவேலைக்குச் சமஊதியம் என்ற கோட்பாடு செயலற்றிருக்கிறது.

            ஆகவே இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும்வகையில் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென ஜே.ஏ.சி-டான்சாக்கின் கவன ஈர்ப்புக் கருத்தரங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

அ) சுயநிதிக் கல்லூரி / வகுப்புகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் தமிழக அரசு ஊதிய மானியம் வழங்கி யு.ஜி.சி. ஊதியம் அமல்படுத்த வேண்டும்.

ஆ) தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டத்தை (TNPC(R) 1976) சுயநிதிக் கல்லூரி/வகுப்புகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் / அலுவலர்களுக்கும் கறாராக அமுல்படுத்தி பணிப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இ) ஆசிரியர், அலுவலர் நியமனத்தில் விதிமுறைகளைக் கறாராகப் பின்பற்றவும், பணிநியமன ஆணை, பணிப்பதிவேடு பராமரித்தல், பணிநிரந்தரம், தற்செயல்விடுப்பு, மகளிருக்குப் பேறுகால விடுப்பு போன்ற சட்டப்படியான உரிமைகளைச் சுயநிதி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு வழங்கிடும் வகையில் TNPC(R)1976ல் உரிய திருத்தங்களைத் தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.

2. சுயநிதிக் கல்லூரி / வகுப்பு, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தொடர்பான தீர்மானம்

அ) சுயநிதிக் கல்லூரி / வகுப்புகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கல்வியாளர் குழுவை நியமித்து நிர்ணயம் செய்திட வேண்டும்.

ஆ) மாணவர்களின் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்து அமுல்படுத்திடவும், மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீட்டை அமுல்படுத்திடவும் ஏதுவாக தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் 1976ல் உரிய திருத்தங்களைத் தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.

இ) சுயநிதிக் கல்லூரி / வகுப்புகள், பல்கலைக்கழக மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கட்டணச் சலுகை, பேருந்துக் கட்டணச் சலுகை, இலவச பஸ்பாஸ், விலையில்லா மடிக்கணினி மற்றும் சலுகைகள் அனைத்தும் அரசுக் கல்லூரி மாணவர்களைப் போன்று வழங்கிட வேண்டும்.

3.பல்கலைக்கழகங்களால் துவக்கப்பட்ட உறுப்புக் கல்லூரிகள் தொடர்பான தீர்மானம்.

கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் உயர்கல்விபெறும் நோக்கோடு தமிழகத்திலுள்ள பல பல்கலைக்கழகங்கள் தங்கள் உறுப்புக் கல்லூரிகளைத் துவக்கி நடத்திவருகின்றன.

இக்கல்லூரிகளுக்குத் தேவையான அரசுநிலமோ, கட்டிடங்களோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லாமல் சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களின் உயர்கல்வித் தேவைகளைப் பூர்த்திசெய்து கொண்டிருக்கின்றன. இங்கு பணியாற்றும் ஆசிரியர்களும், அலுவலர்களும் குறைந்த ஊதியத்துடன் பணிப்பாதுகாப்பு, விடுப்பு வசதிகள், பணிமேம்பாடு போன்றவை இல்லாத சூழ்நிலையில் நிரந்தரமற்ற அடிப்படையிலும், தேதியிட்ட நியமன அடிப்படையிலும் பணியாற்றுகின்றனர். இக்குறைபாடுகளைப் போக்கிட தமிழக அரசு கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட ஜே.ஏ.சி.-டான்சாக்கின் இந்தக்கருத்தரங்கம் கேட்டுக்கொள்கிறது.

அ) அனைத்துப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் நிரந்தரக் கட்டிடங்களில் இயங்குவதற்கு ஏதுவாக அரசு நிலமும், கட்டிடம் மற்றும் கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

ஆ) அனைத்துப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் அரசு ஊதிய மானியம் வழங்கி, பணிப்பாதுகாப்பு, பணிமேம்பாடு மற்றும் விடுப்பு வசதிகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இ) சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகச் சட்டவரம்புக்குள் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைக் கொண்டுவர வேண்டும்.

4.அரசு தொடங்கிய பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், மாதிரிக் கல்லூரிகள் தொடர்பான தீர்மானம்

தமிழக அரசால் துவக்கப்பட்டு பல்கலைக்கழகங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உறுப்புக் கல்லூரிகளாகச் செயல்படும் கல்லூரிகளையும், மாதிரிக் கல்லூரிகளையும் முழு அரசுக் கல்லூரிகளாக மாற்றி ஆசிரியர், அலுவலர், மாணவர் நலன் காத்திட வேண்டுமென ஜே.ஏ.சி-டான்சாக்கின் இந்தக் கருத்தரங்கம் தீர்மானிக்கிறது.

5.பல்கலைக் கழக மானியக்குழுவின் கல்லூரிகள் இணைவு தொடர்பான நெறிமுறைகள் 2009யை தமிழக அரசு அமல்படுத்தக் கோரும் தீர்மானம்

புதிய கல்லூரிகள் மற்றும் புதிய வகுப்புகள் தொடங்குவதற்கு பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்குவதை முறைப்படுத்தவும், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், உயர்கல்வியில் ஊழலைக் கட்டுப்படுத்தவும் பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரிகள் இணைவு தொடர்பான நெறிமுறைகள் 2009ஐ வெளியிட்டு அதனை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் செயல்படுத்த வேண்டுமென ஆணையிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. ஊதிய விகிதம், அலுவலர்களுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் ஊதியம், தகுதியான ஆசிரியர்களை நியமித்தல், ஆசிரியருக்கான கல்வித் தகுதி ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அதில் அடங்கியுள்ளன. இதுவரையிலும் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் யு.ஜி.சி. நெறிகுறைகளை அமுல்படுத்தாமல் கால்ம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றன.

எனவே,தமிழகத்தில் உயர்கல்வி சிறப்பானதாகவும், தரமானதாகவும் அமைந்திட பல்கலைக்கழக மானியக்குழுவின் கல்லூரிகள் இணைவு தொடர்பான நெறிமுறைகள் 2009யை தமிழக பல்கலைக்கழகங்கள் கறாராக அமுல்படுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், அவை முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணித்திட வேண்டும் எனவும் ஜே.ஏ.சி-டான்சாக்கின் இந்தக் கருத்தரங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

6.கன்னியாகுமரி மாவட்டம் மலங்கரை கத்தோலிக்க கல்லூரி நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் தீர்மானம்

கன்னியாகுமரி மாவட்டம், மரியகிரியிலுள்ள மலங்கரை கத்தோலிக்க கல்லூரி நிர்வாகமானது மாணவர்களிடமிருந்து பலமடங்கு அதிகமாக கல்விக்கட்டணத்தை வசூலித்தும், ரெகுலர் வகுப்புகள் என்று சாட்டிலைட் வகுப்புகளில் சேர்த்து மாணவ மாணவிகளையும் பெற்றோரையும் ஏமாற்றி பலமடங்கு அதிகக் கட்டணம் வசூலித்தும், சிறுபான்மைக் கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்காமலும், பலமுறைகேடுகளையும், நிதி நிர்வாகச் சீர்கேடுகளையும் புரிந்து வருகிறது. இந்த முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் போராட்டம் நடைபெற்றது. மூட்டாவில் பொறுப்பு வகிக்கும் கிளையின் மூன்று மூத்த பேராசிரியர்கள் எந்தவிதக் காரணமும் இல்லாமல் கல்லூரி நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தடையாணை பெற்று பணியில் தொடர்ந்துகொண்டிருந்த அந்த மூத்த பேராசிரியர்கள் மீதும், மாணவர்கள் மீதும் கல்லூரி நிர்வாகம் ரவுடிகளை ஏவிவிட்டு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை ஜே.ஏ.சி-டான்சாக்கின் இக்கருத்தரங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு சம்பந்தப்பட்ட ரவுடிகள் மீதும், கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் வழக்குப் பதிவுசெய்து கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், ஆசிரியர் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறது.

மேலும் இக்கல்லூரி நிர்வாகம் புரிந்துள்ள முறைகேடுகள் மற்றும் நிதி நிர்வாகச் சீர்கேடுகள் மீது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், தமிழக அரசும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களை மீண்டும் பணியிலமர்த்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜே.ஏ.சி-டான்சாக்கின் இந்தக் கருத்தரங்கம் தீர்மானிக்கிறது.

 

 

Back