ஜேஏசி-டான்சாக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட எட்டு மையங்களில் 18-12-2014 அன்று மாலை நேர தர்ணா போராட்டம்

இடம்: மதுரை - ஸ்காட் ரோடு (மீனாட்சி பஜார்), தலைமை தபால் நிலையம் அருகில்
               திருநெல்வேலி - ஜவஹர் மைதானம், பாளையங்கோட்டை

அன்பார்ந்த தோழர்களே!
போராட்ட வாழ்த்துக்கள்.
கடந்த சில ஆண்டுகளாக உயர்கல்வித்துறையும், கல்லூரிக் கல்வித்துறையும் செயலற்று இருந்து வருகிறது. தமிழகத்திலுள்ள கல்லூரி ஆசிரியர், அலுவலர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்திய பின்னணியில், கடந்த 24-10-2014 அன்று ஜேஏசி-டான்சாக் பொறுப்பாளர்களுடன் தமிழக உயர்கல்வித்துறை துணைச்செயலர் மற்றும் கல்லூரிக்கல்வி இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு சில கோரிக்கைகளை உடனே தீர்ப்பதாகவும், இதர கோரிக்கைகளின் மீது அரசைக் கலந்து 45நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழக உயர்கல்வித்துறை துணைச்செயலர் மற்றும் கல்லூரிக்கல்வி இயக்குநர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த போராட்ட நடவடிக்கைகளை ஜேசி-டான்சாக் ஒத்தி வைத்தது.

பேச்சுவார்த்தை முடிந்து 45நாட்கள் கழிந்த பிறகும், கோரிக்கைகளின் மீது எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.  இச்சூழலில், 07-12-2014 அன்று சென்னையில் கூடிய ஜேஏசி-டான்சாக் செயற்குழு மற்றும் 14-12-2014 அன்று திருச்சியில் கூடிய ஜேஏசி-டான்சாக் பொதுக்குழு கூட்டங்களில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை மற்றும் கல்லூரிக்கல்வி இயக்குநரகத்தின் அலட்சியப் போக்கினைக் கண்டித்தும், ஜேஏசி-டான்சாக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட அரசை வலியுறுத்தியும் கீழ்க்கண்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

o    18-12-2014 அன்று சென்னை, வேலூர், கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மையங்களில் மாலை நேர தர்ணா

o    2015 ஜனவரி 06,07,08 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டம்

பொதுக்கோரிக்கைகள்

1.        01-01-2006 முதல் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள விதிகளின்படி பணிமேம்பாடு (AGP Rs.6000-7000) உடனே வழங்கிட வேண்டும்

2.        புதிய பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும்

3.        ரூபாய் 14940/= அடிப்படை ஊதியத்தை 5ஆண்டுகள் பணி முடித்த தேர்வுநிலை ஆசிரியர்களுக்கு 01-01-1996 முதல் பணிமேம்பாடு வழங்கிட வேண்டும்

4.        மாணவர்களின் நலத்தினைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் அலுவலர் பணியிடங்களை ஊழலற்ற வெளிப்படை தன்மையுள்ள முறையில் உடனடியாக நிரப்பிட வேண்டும்.

5.        ஓய்வு பெறும் வயதினை பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்தபடி 65ஆக அமல்படுத்த வேண்டும்.

6.        அரசு கடித எண் 63305/Paycell/2010-1 நாள் 8-11-2010 பத்தி 4 மற்றும் 5இல் வரையறை செய்யப்பட்டுள்ள நிபந்தனைகளான முதல்தர பதவி உயர்வு (First level Promotion and Second level Promotion) என்பதை நீக்கி, தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பெற்ற அனைவருக்கும் (இளநிலை உதவியாளர், தட்டச்சர், பண்டக காப்பாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் மற்றும் இதர பதவிகளுக்கும்) அட்டவணையில் உள்ளவாறு அமல்படுத்த வேண்டும்.

7.        அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துவது போல் அரசே செலுத்த வேண்டும்.

8.        பல்கலைக்கழக கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி வகுப்புகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பணிப்பாதுகாப்பு வழங்குவதோடு பல்கலைக்கழகமானியக்குழு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.25,000 வழங்கிட வேண்டும்.

9.        2013 பிப்ரவரி 20,21 அகில இந்திய வேலை நிறுத்த நாட்களை வரன்முறை செய்து அந்த நாட்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும்.

 

மேற்குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளோடு, சங்கம் சார்ந்த 28 பிற கோரிக்கைகளையும் வலியுறுத்தி 18-12-2014 வியாழன் மாலையன்று முதற்கட்ட தர்ணா போராட்டம் நடைபெறும்.

போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

ஜேஏசி-டான்சாக் 
(AUT-MUTA-TNGCTA-TANTSAC)

Back