விலைவாசி உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் இன்று நடக்கிறது - தமிழகம் முழுவதும் தொழிலாளர் - விவசாயிகள் மறியல் போர், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி - கல்லூரிகள் ஸ்தம்பிக்கும் - நாடு முழுவதும் வங்கிப்பணிகள் இன்று முடங்கும்
தி இந்து – 02-09-2015
விலைவாசி உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடக்கிறது: நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் - 15 கோடி பேர் பங்கேற்கின்றனர்; வங்கிப் பணிகள் பாதிக்கும்; ஆட்டோக்கள் ஓடாது
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுதழுவிய பொது வேலை நிறுத்தம் இன்று நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 10 தொழிற் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 15 கோடி பேர் இதில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்ஸிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசியை கட்டுப்படுத்துவது, பகுதிநேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு வங்கிகள் தனியார்மயமாக்கம் மற்றும் அரசுத் துறை பங்குகளை விற்பதைக் கைவிடுவது என்பது உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 12 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
இதையடுத்து, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் கடந்த மாத தொடக்கத்தில் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் இன்று நடத்தப்படுகிறது.
அகில இந்திய அளவில் 10 தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த தொழிற்சங்கங்களில் அரசு, தனியார் நிறுவனங்கள், வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பல துறைகளை சேர்ந்த சுமார் 15 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்பதால் போக்குவரத்து, மின்சாரம், எரிவாயு, எண்ணெய் விநியோகம் போன்ற முக்கிய சேவைகள் பாதிக்கப்படும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய அவகாசம் கொடுக்கவேண்டும் என்று கூறி பாஜக ஆதரவு சங்கமான பிஎம்எஸ், இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி ஆகியவை வேலைநிறுத்தத்தில் இருந்து விலகியுள்ளன.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தி இந்து’விடம் கூறும்போது, பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் தேசிய அளவில் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 45 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். ஸ்டேட் வங்கி, புதிய தலைமுறை தனியார் வங்கிகள் பங்கேற்கவில்லை’’ என்றார்.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன் கூறும்போது, ‘‘வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 20 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் தபால், வருமானவரி, கல்பாக்கம் அணுமின் நிலையம், மத்திய சுகாதார நிறுவனம், சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் என 45 அரசு அலுவலகங்களை சேர்ந்த 1.5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்’’ என்றார்.
காப்பீட்டுத் துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இதுகுறித்து தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் கூறும்போது, ‘‘நாடு முழுக்க காப்பீட்டுத் துறை ஊழியர்கள் 1.50 லட்சம் பேரும், தமிழகத்தில் 10 ஆயிரம் பேரும் பங்கேற்கின்றனர்’’ என்றார்.
தமிழகம் முழுவதும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்ஸி, கால் டாக்ஸி ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் அதிமுக தொழிற் சங்கம் தவிர மற்ற சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதனால், பஸ் போக்கு வரத்து சேவை பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
தீக்கதிர் – 02-09-2015
தமிழகம் முழுவதும் தொழிலாளர் - விவசாயிகள் மறியல் போர் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி - கல்லூரிகள் ஸ்தம்பிக்கும்
நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசின் நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக கோடிக்கால் பூதமென இன்று எழுந்து நிற்கிறது இந்திய தொழிலாளி வர்க்கம். ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, சேவா, ஏஐசிசிடியு, யுடியுசி மற்றும் எல்பிஎப் ஆகிய 10 மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள், மத்திய - மாநில அரசுகளின் ஊழியர்கள், பொதுத் துறை ஊழியர்கள், வங்கி,இன்சூரன்ஸ், மின்சாரம், போக்குவரத்து, ஆட்டோ உள்பட அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்க மக்களும் செப்டம்பர் 2 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் அணிதிரள்கின்றனர். தமிழகம் முழுவதும் புதனன்று காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அனைத்து துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
இந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் - விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் - இளைஞர்கள் - பெண்கள் - மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ரயில் மறியல், சாலைமறியல், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என பல வடிவங்களில் மாபெரும் போர்க்களத்தை சந்திக்கிறார்கள். தமிழகத்தில் வேலைநிறுத்தத்தை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வருவாய் அலுவலர் சங்கம், காப்பீட்டு ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள் மற்றும் மூட்டா, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்கின்றன. மேலும் மத்திய தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைக்கள் கட்சி உள்ளிட்ட இயக்கங்களின் தொழிற்சங்கங்களும் முழுமையாக பங்கேற்கின்றன. இதனால் தமிழகம் முழுவதும் இன்றைய தினம் பஸ், லாரி, ஆட்டோ ஓடாது. அலுவலங்கள் அனைத்தும் ஸ்தம்பிக்கும்.
தினத்தந்தி – 02-09-2015
10 மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் நாடு முழுவதும் வங்கிப்பணிகள் இன்று முடங்கும் தமிழ்நாட்டில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பு
10 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால், இன்று நாடு முழுவதும் வங்கிப்பணிகள் முடங்கும். தமிழ்நாட்டில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்.
‘குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்ட விதிகளை எந்தவித விதிவிலக்கும் இன்றி அமல்படுத்த வேண்டும், அமைப்புசாரா தொழில் துறைக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப்பெற வேண்டும், விண்ணப்பித்த 45 நாளில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்’ என்பவை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இது தொடர்பாக செப்டம்பர் 2–ந் தேதி (இன்று) ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வோம் எனவும் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து திட்டமிட்டபடி, நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் உறுதியாக ஈடுபடுவோம் என ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஜி. சஞ்சீவ ரெட்டி அறிவித்தார். 10 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன. ஆனால் பாரதீய ஜனதா ஆதரவு பெற்ற பி.எம்.எஸ். என்றழைக்கப்படுகிற பாரதீய மஸ்தூர் சங்கம், இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்த வேலை நிறுத்தத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் பங்கு பெறுகின்றன. அவற்றின் 5 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் வங்கிப்பணிகள் அடியோடு முடங்கும் அபாயம் உள்ளது. காசோலை பரிவர்த்தனையும் இருக்காது.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் செய்தி நிறுவனம் ஒன்றுடன் தொலைபேசியில் நேற்று பேசும்போது, ‘‘வேலைநிறுத்தத்தின்போது நாடு முழுவதும் உள்ள வங்கிகள் முன்பாக அதிகாரிகள், ஊழியர்கள் ஊர்வலங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவார்கள்’’ என கூறினார்.
நிலக்கரி, மின்சாரம், சிமெண்டு, ஜவுளி, எண்ணெய், விமானம், காப்பீடு, தபால் துறை பணிகள் பாதிக்கும் என்றும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
இந்த வேலைநிறுத்தத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) மட்டும் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. எனவே அந்த வங்கிக்கிளைகள் மட்டும் வழக்கம்போல இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத பி.எம்.எஸ். பொதுச்செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாய், ‘‘மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தில் ஏராளமான பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்; அப்படியே மின்சாரம், எண்ணெய், கியாஸ் வினியோகம் பாதிக்காது. தேசிய அனல்மின்கழகம், தேசிய நீர்மின்கழகம், பவர்கிரீட் ஆகியவையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது’’ என கூறினார்.
தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் தொடர்பாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் கூறுகையில், ‘‘சுமார் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் அல்லாது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம், உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம், வணிகவரி, வருவாய்த்துறை, மருத்துவத்துறை ஆகியவற்றை சேர்ந்த 10 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொள்கிறார்கள்’’ என தெரிவித்தார்.
இன்றைய வேலை நிறுத்தத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கலந்து கொள்வதாக அதன் மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மத்திய, மாநில அரசுகள் தாராளமய கொள்கைகளை கைவிட்டு, அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, அரசுத்துறைகளை மேம்படுத்தவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும் வலியுறுத்தி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் தமிழக அரசின் அனைத்து துறை ஊழியர்களும் முழுமையாக பங்கேற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தம் நடைபெறும் நேரத்தில் (இன்று) காலை மத்திய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வங்கித்துறை சீர்திருத்தங்களை எதிர்த்தும், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்களும் பங்கேற்பதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்த போராட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்று இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தார்மீக ஆதரவு தெரிவிப்பதாகவும், அதே நேரத்தில் கடைகளை அடைக்குமாறு கூறி, வணிகர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறி உள்ளார்.
வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 2 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன தலைவர் சந்திரன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதன் தலைவர் (சி.ஐ.டி.யு.) சந்திரன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நாளை(இன்று) நடக்க இருக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்பார்கள். 2 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது. ஆட்டோ டிரைவர்கள் மட்டும் அல்லாது, ஆட்டோ தொழிலை நம்பி இருக்கிற இதர தொழிலாளர்கள் 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.
மத்திய அரசு கொண்டு வரக்கூடிய சாலை பாதுகாப்பு சட்டம் மிக மோசமான சட்டம். இதனால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள். இதை கண்டித்து தான் நாங்கள் இந்த போராட்டத்தில் பங்கு பெறுகிறோம். பொதுமக்கள் இதற்கு பேராதரவு தர வேண்டும். ஆட்டோக்களில் பள்ளிக்கு செல்லும் பள்ளிக்குழந்தைகளுக்கு, ஒரு நாள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.